“பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது” – அதிமுக மீது துரைமுருகன் விமர்சனம்..!

ஆளுநர் அனுப்பிய சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு திருப்பி அனுப்ப இன்று தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆளுநரின் செயல்பாடு, பல்கலை.துணை வேந்தர் தேர்வு குறித்து காரசாரமாக விவாதம் நடந்த நிலையில் மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு பெயர் மாற்றி விட்டதாக கூறி அதிமுக வெளிநடப்பு செய்தது. பின்னர் பேசிய அமைச்சர் துரைமுருகன், மீன்வளப் பல்கலைக்கழகம் அதே பெயரிலே நீடிக்கிறது. உண்மைக்கு மாறான செய்தியை அதிமுக கூறி விட்டு வெளிநடப்பு செய்துள்ளது.

அதிமுக வெளிநடப்பு செய்ததற்கான உண்மையான நோக்கம் மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயரை மாற்றியதாக கூறியது அல்ல, ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தால் பாஜகவை எதிர்ப்பது போல் ஆகிவிடும் என அதிமுக நினைக்கிறது. பாஜகவை எதிர்ப்பது போல் ஆகிவிடும் என்பதால் இல்லாத ஒரு காரணத்தை கூறி அதிமுக வெளிநடப்பு செய்துள்ளனர். கிராமத்து பழமொழி போல் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என அதிமுக மீது துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்து வெளியே சென்று விட்டாலும் அதிமுகவில் உள்நீரோட்டம் இருக்கிறது. ஆளுநரை எதிர்த்தால், மோடியை எதிர்த்தது போல என்பதை, அதிமுகவின் இன்றைய வெளிநடப்பில் இருந்து தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் ஜெயலலிதா பெயரில் மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றப்பட்டதாக கூறி அதிமுக வெளிநடப்பு செய்திருந்தது. ஆனால் ஜெயலலிதாவின் பெயரிலான மீன்வளப் பல்கலைக்கழகம் பெயர் மாற்றப்படவில்லை என அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்