தோள்பட்டையில் டைட்டானியம் பிளேட்… 40 நாட்கள் ரெஸ்ட்.! துரை வைகோ கொடுத்த அப்டேட்.!

Durai Vaiko

வைகோ: மதிமுக நிறுவனர் வைகோ அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் இருக்கிறார் என அவரது மகன் துரை வைகோ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த மே 25ஆம் தேதி (சனிக்கிழமை) மதிமுக நிறுவனர் வைகோ நெல்லையில் உள்ள அவரது சகோதரர் வீட்டில் தவறி விழுந்ததில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார்.

சென்னை அப்பாலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வைகோவிற்கு இன்று தோள்பட்டை பகுதியில் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு முன்னதாக வைகோ வீடியோ மூலம் தான் நலமுடன் இருப்பதாக கூறினார். மேலும் , தான் முழு ஆரோக்கியத்துடன் வருவேன். முன்பு போல இயங்க முடியுமா என்று யாரும் பயப்பட வேண்டாம். தமிழ்நாட்டிற்கு செய்யவேண்டிய சேவைகளை செய்வதற்கு காத்து கொண்டிருக்கிறேன். பரிபூரண ஆரோக்கியத்துடன் வருவேன் கூறியிருந்தார்.

அதனை அடுத்து, தற்போது சிகிச்சை முடிந்ததும், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தனது சமூக வலைத்தள பக்கத்தில், தனது தந்தை வைகோவின் உடல்நலம் குறித்து குறிப்பிட்டுள்ளார். அதில், வைகோ அவர்களுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. அவர் நலமுடன் இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இயக்க தலைவர் வைகோ அவர்களுக்கு சற்றுமுன் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. தலைவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். தலைவரின் இடது தோளில் மூன்று இடத்தில் எலும்புகள் உடைந்திருந்தது. தற்போது அதை சரி செய்ய டைட்டானியம் பிளேட் வைத்திருக்கிறார்கள். 40 நாட்கள் ஓய்வுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தோள்பட்டை சரியாகி இயல்பு நிலைக்கு வந்துவிடும்.

வைகோ அவர்களுக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் தொற்றுகள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஒரு வாரத்திற்கு பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆகவே, கழகத் தோழர்களும் நலம் விரும்பிகளும் தலைவர் வைகோவை சந்திக்க வருவதை தவிர்த்து ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தனது சமூக வலைதள பக்கத்தில் துரை வைகோ பதிவிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்