4 மாவட்டங்களில் கனமழை… 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழையும், மிக கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிதம்பரம் பகுதியில் அதிக அளவிலான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அடுத்து கடலூர், திருநெல்வேலி மாவட்டங்களிலும் கனமழை அளவு பதிவாகியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின் படி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை முதல் கனமழை வரையில் பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல், நெல்லை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,
அடுத்து இரண்டு மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் சென்னை, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, தேனி, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.