பொங்கல் வாழ்த்து தெரிவித்த டிடிவி தினகரன்..!

Default Image

பொங்கல் திருநாளை முன்னிட்டு டிடிவி தினகரன் அவர்கள் வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், ‘விவசாயம் தொழில் அல்ல; வாழ்க்கை முறை’ என்பதை உலகிற்குச் சொல்லும் தமிழ் மக்களின் தனித்துவமான பண்டிகையான பொங்கல் திருநாளில் உலகம் முழுக்க வாழ்கிற தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

‘விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிற நாடுதான் உன்னதமான தேசமாக இருக்கும்’ என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொண்டு உழவையும், உழவர்களையும், அவர்களுக்கு உறுதுணையாக உள்ள கால்நடைகளையும் கொண்டாடுவதற்காகத்தான் நம்முடைய முன்னோர் நான்கு நாள் பண்டிகையாக பொங்கல் திருநாளை வடிவமைத்திருக்கிறார்கள்.

பொங்கல் என்பது நமக்கு அறுவடைத்திருநாள் மட்டுமல்ல; உலகின் மூத்த குடியான தமிழ் மக்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பறைசாற்றுவதற்கும், போற்றி கொண்டாடுவதற்குமான திருநாள். அதனை மனதில் கொண்டு உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழனத்தின் பெருமைகளை உயர்த்தி பிடித்திடுவோம்.

போகியில் பழையன நீங்கி ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று நம்முடைய கிராமங்களில் சொல்லப்படுகிற மொழிக்கேற்ப, மீண்டும் மனிதகுலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்கி அனைவரும் அச்சமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்திட தைத்திருநாளில் வழி பிறக்கட்டும். எல்லா வளங்களையும், நலன்களையும் ஒவ்வொருவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் பொங்கல் திருநாள் கொண்டுவந்து சேர்க்கட்டும் என நெஞ்சார வாழ்த்துகிறேன்.’ என  தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்