மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனருக்கு சிறை தண்டனை உறுதி!
முன்னாள் அதிகாரி விஜயராகவனுக்கு விதித்த சிறை தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்.
லஞ்சம் பெற்ற திருவாரூர் மாவட்ட மருந்து கட்டுப்பாட்டுத்துறை முன்னாள் உதவி இயக்குனருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். ரூ.20,000 லஞ்சம் பெற்ற வழக்கில் விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மருந்து விநியோக நிறுவன உரிமங்களின் பெயர் மாற்றம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டது. கணவர் உயிரிழந்த நிலையில், தங்களின் பெயரில் உரிமங்களை மாற்றக்கோரி 2014-ல் அனுராதா என்பவர் விண்ணப்பித்துள்ளார்.
உரிமங்களில் உள்ள பெயரை மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது மருந்து கட்டுப்பாட்டுத்துறை உதவி இயக்குனர் கைது செய்யப்பட்டார். லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட விஜயராகவனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.20,000 அபராதம் விதித்தது கீழமை நீதிமன்றம்.
இந்த நிலையில், கீழமை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து விஜயராகவன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். காவல்துறை தரப்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்பட்டதாக கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.