தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!
இந்தி மாத விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்' என்ற வரி இடம்பெறாததால் சர்ச்சையாகி உள்ளது.
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி நடைபெறுவது இந்தி திணிப்பு எனப் பல தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில், நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியதும், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சியில் ஆளுநர் முன்னிலையில், அங்கிருந்தவர்கள் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை பாடினார்கள். தொடக்கத்திலே தடுமாறி தான் பாடிக்கொண்டு இருந்தார்கள். அப்போது, “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரியை விட்டு விட்டு அதற்கு அடுத்த வரியான தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே பாடல் வரி பாடப்பட்டது.
இதன் காரணமாக ஆளுநர் ரவி பங்கேற்ற விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டதா? எனப் பலரும் கேள்விகளை எழுப்பிக்கொண்டு வருகிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அதைத் திருத்தி, திராவிடம் என்ற சொல் வாசிக்காமல் விடுபட்டதற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் ஆளுநர் இன்று பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது திட்டமிட்டே தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது.
ஆளுநரை திருப்தி படுத்த டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இவ்வாறு…
— Selvaperunthagai K (@SPK_TNCC) October 18, 2024
இது ஒரு பக்கம் சர்ச்சையான நிலையில், மற்றொரு பக்கம் ஆளுநர் நிகழ்ச்சியில் பேசியதும் சர்ச்சையாகியுள்ளது. விழாவில் பேசும்போது ஆளுநர் ரவி இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைப் பிரிக்கக் கடந்த 50 ஆண்டுகளில் பல முறை முயற்சி நடந்துள்ளது எனப் பேசியிருந்தார். எனவே, எதனை வைத்து இப்படியான விஷயத்தை ஆளுநர் ரவி பேசியுள்ளார் எனவும் சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இதன் காரணமாக, “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” எதிர்ப்பில் தொடங்கி சர்ச்சையில் முடிந்துள்ளது.