பிரதமர் அறிவித்த விஸ்வகர்மா திட்டம்… போராட்டத்தை அறிவித்த திராவிடர் கழகம்.! 

PM Modi - Dravidar Kazhagam Leader K Veeramani

கடந்த சுதந்திர தின விழாவின் போது பிரதமர் நரேந்திர மோடி விஸ்வகர்மா திட்டம் பற்றி அறிவித்தார். பாரம்பரிய தொழில் செய்வோருக்கு அவர்கள் தொழிலை ஊக்கப்படுத்தும் நோக்கில் நிதியுதவி வழங்கப்படும் எனவும், இதற்காக 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவித்தார். அதன் படி , சில தினங்களில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இந்த பரம்பரை தொழில் முறைக்கு மத்திய அரசு அறிவித்துள்ள விஸ்வகர்மா திட்டத்திற்கு பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதனால் தந்தை தொழிலை தொடர மகன் உந்தப்படுகிறார். இதனால் மகன் வேறு துறை செல்லும் நிலை மாறும் என எதிர்ப்பு குரல் எழும்பியது.

இந்நிலையில், இந்த விஸ்வகர்மா யோஜனா எனும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக, திராவிடர் கழகம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி அறிவித்துள்ளார் .

இது தொடர்பாக திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் மத்திய அரசு இளைஞர்களை குலத்தொழில் பக்கம் ஈர்க்கும் சூழ்ச்சி செய்கிறது. விஸ்வகர்மா யோஜனா என்ற ஒரு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினக் கொடியேற்று நிகழ்ச்சியிலும் அறிவித்துள்ளார்.

செருப்பு தைப்பவர் உட்பட பரம்பரை பரம்பரையாக 18 வகையான ஜாதி தொழில்களைச் செய்பவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாகக் கூறி ரூபாய் 13 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.  ‘குரு சிஷ்யப் பரம்பரை’ என்றும் வெளிப்படையாகவே கூறப்பட்டுள்ளது. இந்த
நிதியைப் பெறுவதற்கு குறைந்தபட்ச வயது 18 என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்
பின்னணியில் இருப்பது 18 வயது அடைந்த பிள்ளைகளை மேற்கொண்டு கல்லூரியில்
படிக்கவிடாமல் பரம்பரை ஜாதித் தொழிலையே செய்யத் தூண்டும் விதமாக திட்டம் அமைந்துள்ளது.

இது 1952-1954இல் தமிழக முதலமைச்சராக இருந்த ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்பாகும். ஆண்டாண்டு காலமாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட பிள்ளைகள் கல்வியில் உயர்நிலையை எட்டுவதைத் தடுத்து நிறுத்தி, 18 வயது அடைந்தவுடன் அவர்களைப் பரம்பரை ஜாதித் தொழிலை நோக்கியே நகர்த்திடத் திட்டமிட்டுள்ள மத்திய அரசின் இந்த  விஸ்வகர்மா திட்டத்தை திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

நாக்கில் தேன் தடவுவது போல, நிதியை ஒதுக்கி, காலம் காலமாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட மக்கள், தப்பித் தவறிக் கல்லூரியில் அடியெடுத்து மேற்படிப்பு படிக்க முன் வந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் அதனை முறியடிக்கும் சூழ்ச்சி தான் ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டம்.

முதற்கட்டமாக இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் குலக்கல்வித் திட்டத்தின் மறுவடிவமான விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து அனைத்து சமூகநீதிக் கொள்கை சார்ந்த கட்சிகளும் ஒருங்கிணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை வரும் செப்டம்பர் 6 ஆம் தேதியன்று சென்னையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்