கழிவுகளை அகற்றும் போது உயிரிழந்தவர்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்! மத்திய சமூக நீதி துறை அதிர்ச்சி தகவல்!
சமீபத்தில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. அதில், இந்தியாவில் 1993 முதல் தற்போது வரை கழிவுகளை அகற்றும் பணிகளின் போது விஷவாயு தாக்கி, மற்ற விபத்துகளின் மூலமாகவும் 620 பேர் உயிரிழந்துள்ளனர். ‘
அதில் வருத்தப்படகூடிய விஷயம் என்னவென்றால், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இதுவரை தமிழ்நாட்டில் 144 பேர் உயிரிழந்துள்ளனர். கடைசியாக 3 வருடத்தில் மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர்.
அடுத்ததாக குஜராத்தில் 131 பேரும், கர்நாடகாவில் 75 பேரும், உத்திரபிரதேசத்தில் 71 பேரும், ஹரியானாவில் 51 பேரும், உயிரிழந்துள்ளனர். இதில், 15 மாநிலங்களில் உயிரிழந்தவர்கள் மட்டுமே கணக்கெடுக்கபட்டுள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். அதில், ‘இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமானோர் கழிவுகளை சுத்தம் செய்கையில் உயிரிழந்திருப்பது வெட்ககேடானது. இதனை சரி செய்ய தமிழக அரசிடம் பணமில்லையா அல்லது மனமில்லையா என கேள்வி எழுப்பினார்.
மேலும், ‘ அவ்வாறு உயிரிழந்தவர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என விசாரித்து பாருங்கள்.’ என கூறியிருந்தார்.
இது குறித்து பேசிய அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ‘ கழிவுகளை அகற்ற புதிய எந்திரங்கள் வாங்கப்படுகின்றன’ என தெரிவித்தார்.