சென்னை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
சென்னை, கரூர், சேலம் மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், 3.14 கோடி பெண் வாக்காளர்கள், 3.03 கோடி ஆண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7,758 பேர் உள்ளனர் என தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தலை ஒப்பிடுகையில், சுமார் 17 .69 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். டிச.8-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என்றும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சென்னையில் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் எனவும் கூறியிருந்தார்.
தமிழகத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலியை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டதை தொடர்ந்து, மாவட்டத்திற்கான வரவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில், கரூரில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் வெளியிட்டார். 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 8,92,935 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர் என தெரிவித்திருந்தார்.
இதுபோன்று சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதில், 11 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 29,14,250 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், தற்போது, 16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கூடுதல் தேர்தல் அதிகாரி விஷூ மகாஜன் வெளியிட்டார்.
2023-ஆம் ஆண்டு வாக்காளர் வரைவு பட்டியலின்படி, சென்னையில் மொத்தம் 38.92 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண் வாக்காளர்கள் 19,75,788 பேர், ஆண் வாக்காளர்கள் 19,15,611 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 1,058 பேர் உள்ளனர். மேலும், சென்னையில் மொத்தமாக 3,723 வாக்குச்சாவடிகள் உள்ளதாகவும் கூறினார்.