சமூக ஊடகங்களை எதிர்மறையாக பயன்படுத்தாதீர் – பாமக நிறுவனர்
சமூக ஊடகங்களை கொண்டு சாதிக்க வேண்டுமே தவிர சண்டையிட கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், எதையெல்லாம் வரம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோமோ அதுவே சில நேரங்களில் சாபமாகி விடுவது உண்டு.
பாமகவினரின் சமூக ஊடக பயன்பாடு அப்படிப்பட்டதாகவே மாறி இருக்கிறது. அண்ணா கூறிய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பது அனைத்து கட்சியினருக்கும் பொருந்தும். அரசியல் கட்சியில் இருப்பவர்கள், அண்ணாவின் அறிவுரையை பின்பற்றவில்லை என்றால் பின்னடைவுதான் ஏற்படும்.
அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள் மற்றவர்களை நாகரிகமான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும். கட்சி நெறிமுறைகளை கடைபிடிக்க தவறியவர்களுக்கு பாமகவில் தொடர்ந்து பயணிக்க எந்த தகுதியும் கிடையாது. கருத்து வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து கட்சி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தி உள்ளார்.