தமிழ்நாட்டிற்கு ஆளுநர் ரவி பாடம் எடுக்க வேண்டாம் – டி.ஆர்.பாலு
ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தமிழகம் புண்ணிய பூமி; இங்கு ஆரியம் – திராவிடம் கிடையாது. இந்தியாவை பிரித்தாளும் கொள்கைக்காகவே கால்டுவெல் போன்றவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். சுதந்திர தினத்தை கருப்பு நாள் எனக் கூறியவர்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள் என பேசியிருந்தார்.
இவரது கருத்துக்கு டி.ஆர்.பாலு அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உருவாக்கிய கவர்னர் என்ற நியமனப் பதவியில் வெட்கமின்றி உட்கார்ந்துகொண்டு கூச்சமில்லாமல் பொய்களைப் பேசுகிறார் ஆளுநர். திடீரென்று திருக்குறளில் “என்நன்றி கொன்றார்கும்” குறளை படித்திருக்கிறார்.
வெள்ளையரை எதிர்த்து வீரப் போர் புரிந்து, உயிரைத் துச்சமென நினைத்து, மரணத்தை முத்தமிட்ட மாவீரர்கள் மருது சகோதரர்களின் தியாகத்தை தமிழ்நாடு அரசு போற்றிவரும் நிலையில், விழா ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ரவி பச்சைப் பொய்களை கொட்டி கடை விரித்திருக்கிறார். மாவீரர்கள் மருது சகோதரர்களின் தியாகத்தை தமிழ்நாடு அறியும் . தமிழ்நாட்டிற்கு ஆளுநர் ரவி பாடம் எடுக்க வேண்டாம் .
மருதுபாண்டியர் வரலாற்றை சித்தரிக்கும் ஊர்தியை டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் சேர்க்க முடியாது என மறுத்தபோது இந்த ஆளுநர் ரவி எங்கே போனார்? அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் கோப்புகளிலும், தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களிலும் கையெழுத்திடாமல் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ஊர்சுற்றித் திரியும் ஆளுநர் ரவிதான் அந்த குறளுக்குப் பொருத்தமானவர்.
தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்வதை கைவிட்டு- திருக்குறளுக்கு ஏற்ப நடக்க வேண்டும். தமிழ்நாடுதான் விடுதலைப் போராட்டத்துக்கான விதையை முதலில் விதைத்தது நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றிய இயக்கம்தான் திமுக. தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்வதை ஆளுநர் கைவிட வேண்டும். ஆதாரமற்ற பொய்களை பரப்புவதை, ஆளுநர் இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.