புதிய திரைப்படங்களை ஓடிடியில் வெளியிட அவசரம் வேண்டாம்..! திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை..!
புதிய திரைப்படங்கள் வெளி வந்து 8 வாரம் கழித்து தான் ஓடிடியில் வெளியாக வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதிதாக தயாரிக்கப்பட்டு வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் 30 நாட்களில் ஓடிடி (OTT) தளங்களில் ரிலீஸ் செய்யப்படும். அந்தவகையில், புதிய திரைப்படங்கள் அனைத்தும் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்கள் கழித்துதான் ஓடிடி தளங்களில் திரையிடப்பட வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
அதன்படி வெளியான அறிக்கையில், புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளி வந்து 8 வாரம் கழித்து தான் ஓடிடி (OTT) தளங்களில் திரையிட வேண்டும். ஓடிடியில் வெளியாகும் புதிய திரைப்படங்களுக்கு 4 வாரங்கள் கழித்த பிறகு தான் விளம்பரம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய திரைப்படங்களுக்கு அதிகபட்சமாக 60% சதவிகிதம் தான் பங்குத் தொகையாக கேட்க வேண்டும். திரையரங்குகளில் வெளியிடுவதற்கு தயாரிக்கப்பட்ட படங்களை ஓடிடியில் திரையிடும் போது அதில் வரும் வருமானத்தில் ஒரு பங்கு திரையரங்குகளுக்கு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், திரையங்குகளுக்கு பராமரிப்பு கட்டணம் மற்ற மாநிலத்தில் உள்ளது போல வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் திரையரங்குகள் வர்த்தக சம்மந்தமான நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்கிற முந்தைய கோரிக்கைகளை அரசு மறுபரிசீலனை செய்து விரைவில் அனுமதி தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.