ஆளுநரை நான் விமர்சிக்கிறேன் என்பதற்காக அவரை மாற்றிவிடாதீர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
ஆளுநரை நான் விமர்சிக்கிறேன் என்பதற்காக அவரை மாற்றிவிடாதீர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
குறிப்பாக, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட வடிவை திரும்பப் பெற வலியுறுத்தியும், ஆளுநரை கண்டித்தும் திமுக சட்டத்துறை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வந்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியது குறித்து முக்கிய விஷயங்கள் பின்வருமாறு..
முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் ” தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழ் இனத்தை காக்கும் அரணாக, தூணாக திமுக சட்டத்துறை திகழ்கிறது. முக கொடி, சின்னத்திற்கு பிரச்சினை வந்தபோது அதனை மீண்டும் மீட்டுத் தந்தது சட்டத் துறைதான். அண்ணா அறிவாலயத்தின் இடத்திற்கே நெருக்கடி வந்தது. அங்கு கட்டடம் கட்டக்கூடாது என தடை போட்டார்கள். அந்த தடையை உடைத்தது இந்த சட்டத்துறை தான். நாள்தோறும் கட்டமைக்கப்படும் பொய்களை தகர்த்தெறிந்து 75 ஆண்டுகால கற்கோட்டையாக திமுக நிமிர்ந்து நிற்கிறது. இதற்கு, தொண்டர்களின் தியாகம் தான் காரணம். ” எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியாக பேசினார்.
தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பேசினார். இது பற்றி பேசிய அவர் ” ஆட்சி பொறுப்பில் இருக்கும் பாஜகவை பொறுத்தவரையில் ஒரே மதம், ஒரே மொழி ஒரே பண்பாடு ஒரே உடை ஒரே உணவு ஒற்றை பண்பாட்டை நோக்கி நாட்டை நகர்த்த பார்க்கிறது. அதற்காக தான் ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறது. நாடு முழுக்க ஒரே நேரத்தில் தேர்தல் என்று சொல்பவர்கள், காலப்போக்கில் நாட்டுக்கே ஒரே தேர்தல் என உருவாக்க நினைக்கிறார்கள். இது ஒற்றை ஆட்சிக்குத்தான் வழிவகுக்கும்” எனவும் தெரிவித்தார்.
அதன்பிறகு ஆளுநர் ரவி குறித்து முதல்வர் பேசுகையில் ” ஆளுநரை நாங்கள் விமர்சிப்பதால் அவரை மாற்றிவிடாதீர்கள். ஏனென்றால், அவர் பேசப் பேசத்தான் பாஜகவின் முகம் அம்பலப்படும். ஆளுநர் நம்மை அரசமைப்புக்கு எதிரானவர்களாக கட்டமைக்கும் பணியில் இறங்கியுள்ளார். எனவே ஆளுநரை மாற்றம் செய்யவேண்டாம்” எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.