திமுகவினரை சீண்டி பார்க்க வேண்டாம்.. இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை! – முதலமைச்சர் வீடியோ வெளியீடு!

mk stalin

திமுக நடத்திய போராட்டங்கள் எப்படிப்பட்டது என்று வரலாற்றை புரட்டி பாருங்கள் என பாஜகவுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவுடன், தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் முதல்வர் கூறுகையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை அநியாயமான பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.

செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கை அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் என்பதில் சந்தேகம் இல்லை. 10 ஆண்டு பழமையான புகாரை வைத்து கொண்டு 18 மணி நேரம் அடைத்து வைத்து விசாரித்துள்ளனர். செந்தில் பாலாஜி மீது தவறு இருந்தால் அவரை அழைத்து விசாரித்தால் தவறியில்லை. மக்கள் பிரதிநிதி செந்தில் பாலாஜியை ஏதோ தீவிரவாதியை போல் அமலாக்கத்துறை நடத்தியுள்ளது.

எந்த ஆவணங்களை எடுத்தாலும் அது குறித்து விளக்கம் அளிக்க தயார் என சொல்லியிருந்தார். அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தபோது முழு ஒத்துழைப்பு கொடுத்தார் செந்தில் பாலாஜி. ஓடி ஒளியக்கூடிய அளவுக்கு அவர் சாதாரமானவர் இல்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். அமைச்சர் செந்தில் பாலாஜி 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

ஒரே ஸ்க்ரிப்டை வேறு வேறு மாநிலங்களில் மத்திய அரசு டப்பிங் செய்கிறது. பாஜக ஆட்சியில் அறிவிக்கப்படாத எமர்ஜன்சி நடந்து வருகிறது. பாஜக தலைமை அமலாக்கத்துறை மூலம் அரசியல் செய்ய நினைக்கிறது. மக்களை சந்தித்து அரசியல் செய்ய தயாராக இல்லை. கருத்தியல் ரீதியாக, அரசியல் ரீதியாக தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்களை விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவது பாஜக பாணி.

ஜனநாயக விரோத பாணியைதான் இந்தியா முழுமைக்கும் அவர்கள் பின்பற்றி வருகின்றனர். வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை வைத்து மிரட்டுகிறது. பாஜகவின் அரசியலே, மக்கள் விரோத அரசியல்தான், பாஜகவை நம்ப மக்கள் தயாராக இல்லை. முக்கிய தலைவர்கள் கைது மூலம் மிரட்டி பணிய வைக்க பாக்கிறது பாஜக.

பாஜக ஆளும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் எந்த சோதனையும் நடத்தப்படவில்லை. ஏனென்றால், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத்தில் ஆட்சி செய்வது “உத்தமபுத்திரன்” பாஜக. பாஜக ஆட்சியில் மட்டும் இதுவரை 3000 ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன. மிரட்டிப் பணிய வைக்க நினைத்தால், குனிய மாட்டோம். நிமிர்ந்து நிற்போம்.

திமுகவை பற்றி தெரியவில்லை என்றால் டெல்லியில் இருக்கும் மூத்த தலைவர்களைக் கேட்டுப் பாருங்கள். நாங்கள் ஆட்சிக்காக மட்டும் கட்சி நடத்துபவர்கள் இல்லை, கொள்கைக்காகக் கட்சி நடத்துகிறவர்கள். எல்லாவற்றையும் பார்த்தவர்கள் நாங்கள், எங்களுக்கு என்று தனித்த அரசியல் கொள்கை, கோட்பாடுகள் இருக்கின்றன என்றார்.

எல்லா அரசியலும் எங்களுக்கு தெரியும், திருப்பி அடித்தால் தாங்க முடியாது என கலைஞரின் வாசகத்தை நினைவுகூர்ந்து கூறினார். திமுக நடத்திய போராட்டங்கள் எப்படிப்பட்டது என்று வரலாற்றை புரட்டி பாருங்கள். மேலும், திமுகவை சீண்டி பார்க்க வேண்டாம், இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்