அண்ணா பெயரை வச்சிக்கிட்டு ஒதுங்கி நிக்காதீங்க சீக்கிரம் வாங்க… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு!
இந்த ஆர்ப்பாட்டம் போராட்ட களமாக மாறாமல் இருப்பது மத்திய அரசின் கையில்தான் உள்ளது என துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை : மும்மொழி விவகாரம் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.க தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திருமாவளவன் எம்.பி.மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள்.
அதில் பேசிய உதயநிதி ஸ்டாலின் ” தமிழ்நாட்டு மக்களையும், தமிழ்நாடு அரசையும் மிரட்டி ஒருபோதும் பணிய வைக்க முடியாது. தமிழர்கள் நாம் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள், எந்த காலத்திலும் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் அடிபணியவும் மாட்டோம். இது திராவிட மண். சுயமரியாதை மண் என்பதை மத்திய அரசு உணர வேண்டும் மற்ற மாநிலங்களைப் போல மும்மொழி கொள்கையை ஏற்று இந்தியை ஏற்றால், நாங்கள் எங்களுடைய தாய்மொழி தமிழை இழந்துவிடுவோம்.
நாங்க ஒன்னும் உங்க அப்பன் வீட்டு காச கேட்கல. பிச்சையோ, கடனோ கேட்கல. நாங்கள் கேட்பதெல்லாம் தமிழ்நாட்டு மாணவர்களின் பெற்றோர்கள் கட்டிய வரிப் பணத்தைதான் கேட்கிறோம். எங்களுடைய நிதியை உரிமையோடு கேட்கிறோம். எனவே, 100 பேர் அல்ல ஆயிரக்கணக்கானோர் உயிரையும் கொடுத்து தமிழைக் காக்கத் தயாராக இருக்கிறோம். உரிமைகளைக் காக்க உயிரையும் விட தயாராகவே உள்ளோம்.
இந்த ஆர்ப்பாட்டம் போராட்ட களமாக மாறாமல் இருப்பது மத்திய அரசின் கையில்தான் உள்ளது. தமிழ்நாடு இன்னொரு மொழிப்போரை சந்திக்கவும் தயங்காது. இந்த ஆர்ப்பாட்டம் வெறும் தொடக்கம்தான். விரைவில் தமிழ்நாடு முழுக்க போராட்டமாக மாறும்” எனவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அதனைத்தொடர்ந்து பேசிய அவர் “இந்த விவகாரத்தில் அண்ணா பெயரை வைத்துக்கொண்டு ஒதுங்கி நிற்காதீர்கள். எங்களோடு வீதிக்கு வாருங்கள். ஏனென்றால், இது திமுகவுக்கான பிரச்னை கிடையாது. மாணவர்களுக்கான போராடும் ஒரு போராட்டம். முக்கியமாக தமிழுக்கான போராட்டம்” என கூறி மும்மொழிக் கொள்கைக்கு எதிரானப் போராட்டத்தில் இணைந்து போராட அதிமுகவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.