வாக்காளர் அட்டை இல்லையா? – தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு.!
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில் ஏற்கனவே, சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்காளர்களுக்கு தேர்தலில் புகைப்பட வாக்காளர் சீட்டுக்கு பதில் வாக்காளர் தகவல் சீட்டு வழக்ங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
வாக்காளர் தகவல் சீட்டில், வாக்கு சாவடி மையம், வாக்குப்பதிவு நாள், வாக்குப்பதிவு நேரம் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. வாக்காளர் தகவல் சீட்டில் வாக்காளர் புகைப்படம் இடம்பெறாது எனவும் குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோர் புகைப்படத்துடன் கூடிய 11 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஆதார், பான், ஓட்டுநர் உரிமை, பாஸ்போர்ட், வங்கி கணக்கு, ஓய்வூதியம் கணக்கு, மருத்துவ காப்பீடு கணக்கு, 100 நாள் வேலை அட்டை உள்ளிட்ட ஆவணங்களை மூலம் வரும் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் தகவல் சீட்டை ஆதாரமாக கொண்டு வாக்களிக்க முடியாது என்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை கொண்டுதான் வாக்களிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.