பொங்கல் பரிசுக்கான டோக்கன் கிடைக்கவில்லையா? – தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்புடன் மற்றும் ரூ.1,000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு நியாயவிலை கடைகள் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகத்திற்காக கடந்த ஜனவரி 7-ம் தேதி முதல் ஜனவரி 9-ம் தேதி வரை டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், இன்று முதல் ஜன.13-ம் தேதி வரை டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்பை குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
பொங்கல் பரிசு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்..!
அதன்படி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு நியாய விலை கடையில் இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பொங்கல் தொகுப்பை 13-ம் தேதிக்குள் பெற முடியாதவர்கள் 14-ம் தேதி பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் கிடைக்கப்பெறாத அரிசி குடும்ப அட்டைதாரர்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் தொகையை ஜன.13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.