சென்னையை மறந்துவிட வேண்டாம்; உங்களுக்காக ஒரு சகோதரன் இங்கே இருக்கிறேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் நடந்து முடிந்துள்ளது என செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் பேச்சு.
மாமல்லபுரத்தில் 12 நாட்களாக நடைபெற்று வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகளமாக நிறைவு பெறுகிறது. இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் நடந்து முடிந்துள்ளது. செஸ் போட்டியில் வென்றவர்களை விட நான் மகிழ்ச்சியாக உள்ளேன் மிக குறுகிய காலத்தில் 4 மாதத்தில் செஸ் ஒலிம்பியாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன என தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி, சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர், ஆசிய பீச் வாலிபால் தொடர் ஆகியவற்றை சென்னையில் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. சர்வதேச கடற்கரை போட்டிகளை நடத்தவும் தயாராக உள்ளோம் என்றும், சென்னையை மறந்துவிட வேண்டாம்; உங்களுக்காக ஒரு சகோதரன் இங்கே இருக்கிறேன் என வெளிநாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விளையாட்டில் முன்னோடி மாநிலமாக ஆக்குவதற்கு திராவிட மாடல் தமிழ்நாடு அரசு திட்டங்களை தீட்டி வருகிறது. ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டம் ரூ.25 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. சிலம்பத்திற்கு தேசிய அங்கீகாரம் பெற்று தர முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.