இருளுடன் போராட வேண்டாம்..! சத்குருவின் தீபாவளி வாழ்த்து..!

Default Image

“இருள் என்னும் அறியாமையுடன் போராட வேண்டாம்; தெளிவு என்னும் ஒளியை ஏற்றினால் அறியாமை இருள் தானாக மறைந்துவிடும்” என தீபாவளி வாழ்த்து செய்தியில் சத்குரு தெரிவித்துள்ளார்.

பாரத கலாச்சாரத்தின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சத்குரு அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

கலாச்சார ரீதியாக தீபாவளி தினமானது நரகாசூரனை கிருஷ்ணர் வதம் செய்த தினமாகவும், வனவாசம் முடித்து அயோத்தியாவிற்கு திரும்பிய ராமரை மக்கள் தீபங்களுடன் வரவேற்ற தினமாகவும் கொண்டாடப்படுகிறது. அடிப்படையில், இந்நாள் அறியாமையை வீழ்த்தி தெளிவு என்னும் வெற்றியை பெறும் சாத்தியத்தை குறிக்கும் நாளாகும்.

தீபம் என்றால் வெளிச்சம். பொதுவாக வெளிச்சம் தெளிவோடும், இருள் அறியாமையோடும் ஒப்பிடப்படுகிறது. இருள் என்பது வெளியில் இருந்தாலும், நமக்குள் இருந்தாலும் நம் கண் முன் இருப்பதே நமக்கு புரியாது. தீபாவளி என்பது வெறும் வீட்டில் விளக்கேற்றும் தினம் கிடையாது. நமக்குள்ளும் விளக்கு ஏற்ற வேண்டும்.

வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு சில குறிப்பிட்ட காரணங்கள் இருக்கிறது. மின் விளக்குகள் இல்லாத காலத்தில் எண்ணெய் விளக்கு என்பது மிகவும் முக்கியமான விஷயமாக இருந்தது. அப்போது சூரியன் மறைந்த பிறகு விளக்கின் தேவை அத்தியாவசியமானதாக இருந்தது. அதன் முக்கியத்துவத்தை நீங்கள் உணர வேண்டுமென்றால், தீபாவளி நாளன்று மின் விளக்குகளுக்கு பதிலாக எண்ணெய் விளக்குகளை வீட்டில் ஏற்றுங்கள். அப்படி செய்தால், அதன் தாக்கத்தையும் ஆனந்தத்தையும் நீங்கள் உணருவீர்கள். அது வீட்டின் சூழ்நிலையையே மாற்றிவிடும். பூஜை அறையில் தினமும் எண்ணெய் விளக்குகளை ஏற்றினால், உங்கள் ஆரோக்கியமும் மேம்படும்.

வெளியில் மட்டுமின்றி உங்களுக்குள்ளும் வெளிச்சம் வர வேண்டும். உங்களுக்குள் தெளிவை ஏற்படுத்த ஈஷாவின் மூலம் பல யோக கருவிகளை நாங்கள் இலவசமாக வழங்குகிறோம். அதனை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

அறியாமை என்னும் இருளை நீக்குவதற்கு அதனுடன் நீங்கள் போராட கூடாது. இருள் நிறைந்த ஒரு இடத்தில் ஒரு ஒளி விளக்கை ஏற்றினால், இருள் காணாமல் போய்விடும். அதேபோல், தெளிவு பிறந்தால் அறியாமை இல்லாமல் போய்விடும். இந்த தீபாவளி திருநாள் உங்கள் வாழ்வில் ஒரு மகத்தான நாளாக இருக்க வேண்டும் என்னுடைய ஆசை, என்னுடைய அருள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்