“அச்சம் கொள்ள வேண்டாம், வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்” – துணை முதல்வர் உதயநிதி!
பஞ்சாப்பில் தாக்கப்பட்ட தமிழக கபடி வீராங்கனைகள் தற்போது பாதுகாப்பாக உள்ளனர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சென்னை : பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பீகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியினர் இடையே கபடி போட்டி நடந்தது.
அப்போது, பவுல் அட்டாக் தொடர்பாக நடுவரிடம் தமிழக வீராங்கனை புகார் அளித்துள்ளார். இதையடுத்து தமிழக வீராங்கனைகள் மற்றும் நடுவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், வீராங்கனைகளை நடுவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் பெரியதாகிய நிலையில், தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், பஞ்சாப்பில் உள்ள தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர். பயிற்சியாளர் கைது செய்யப்படவில்லை, விசாரணைக்கு பிறகு அனுப்பப்படவுள்ளார். நாளை ரயில் மூலம் அவர்கள் அனைவரும் சென்னை அழைத்து வரப்படுவார்கள். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, பஞ்சாப் மாவட்ட ஆட்சியரிடம் கலந்துரையாடிய பிறகு, தமிழ்நாடு அரசு இந்த தகவலை பகிர்ந்துள்ளது.
மேலும், பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பஞ்சாப்பில் தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
யாரும் அச்சப்பட வேண்டாம். வதந்திகளை பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். தகவல் தெரிய வந்ததும் உடனடியாக அங்குள்ள மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்தோம். இன்றைக்கே அவர்களை டெல்லி அழைத்துச் சென்று, அங்குள்ள தமிழ்நாடு ஹவுஸில் தங்கவைக்கப்பட்டு, உரிய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்” என்று கூறியுள்ளார்.