“பயப்படாதீங்க மெதுவா வரேன்”…வேகம் குறைந்த ஃபெஞ்சல் புயல்!
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் எப்போது தான் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இன்று (நவ.30) மாலை மரக்காணத்திற்கு அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. முன்னதாக வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள இந்த ஃபெஞ்சல் புயல் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அதனுடைய வேகம் குறைந்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது கொடுத்த தகவலின் படி, ஃபெஞ்சல் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் தற்போது 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி கடற்கரை பகுதியில் கரையை கடக்கிறது. தற்போது, புயல் மாமல்லபுரத்தில் இருந்து 50.கி.மீ தொலைவில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைப்போல, புயல் முன்னதாக சென்னைக்கு அருகே 100 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது 90.கி.மீ தொலைவுக்கு நெருங்கியுள்ளது. இதனால் சென்னையில் மணிக்கு 60.கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது.
புயல் கரையை கடப்பதால் 13 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.