வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!
பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து கியாஸ் சிலிண்டர் விலையையும் உயர்த்துவதாக மத்திய அரசு அறிவிப்பு.

சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை ஒரு சிலிண்டருக்கு நீங்கள் செலுத்திய தொகையை விட இனி ரூ.50 அதிகமாக செலுத்த வேண்டும். இந்த புதிய விலை நாளை (ஏப்ரல் 08, 2025) முதல் அமலுக்கு வரும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி (Excise Duty) 2 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதாவது, பெட்ரோல், டீசல் விலையை அரசு நேரடியாக உயர்த்தவில்லை என்றாலும், அவற்றின் மீதான வரியை அதிகரித்துள்ளது.இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் உயர்த்தியுள்ளனர்.
சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.818.50 ஆக இருந்தது. இப்போது ரூ.50 உயர்வு சேர்க்கப்பட்டால், புதிய விலை ரூ.868.50 ஆக இருக்கும்.
உயர்வுக்கு காரணம் என்ன?
சமையல் எரிவாயு விலை பெரும்பாலும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து மாறுபடும். கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், அதை இறக்குமதி செய்யும் செலவு அதிகரிக்கும். இதனால் எரிவாயு உற்பத்தி செலவும் உயர்கிறது. மேலும், அரசின் பொருளாதாரக் கொள்கைகள், வரி மாற்றங்கள் ஆகியவையும் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.