ஒரு அரசியல்வாதியுடன் சேர்ந்து படம் எடுப்பதா என்ற என்னுடைய எண்ணத்தை தகத்தெரிந்தவர் அன்பழகன்.. இயக்குனர் அமீர்!

Default Image

திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில் மௌனம் பேசுதே, பருத்தி வீரன், ஆதிபகவன், போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அமீர் தனது இரங்கலை தெரிவித்தார்.

சென்னை மேற்கு மாவட்ட திமுகச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வுமான  ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் இன்று காலை 08.05 மணிக்கு காலமானார்.

மேலும், தனது 62-வது பிறந்த நாளான இன்று இவர் காலமானார். ஜெ.அன்பழகன் அவர் குணமடைந்து வீடு திரும்பியதும் அவரது பிறந்தநாளை கொண்டாடவேண்டும் என உறவினர்களும், கட்சியினர் நினைத்து இருந்த நிலையில், அவரது மறைந்த செய்தி, உறவினர்கள், கட்சியினரை என அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ஜெ.அன்பழகனின் மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், பிரபல இயக்குனரான அமீர் தனது இரங்கல் தெரிவித்தார்.

அன்பழகன் மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்ட அவர், “எனது அருமை அண்ணனும், திமுக எம்எல்ஏவுமான ஜெ. அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என்கிற செய்தியைக் கேட்டறிந்த நாளில் இருந்தே என் மனம் வேதனைப்பட்டதோடு மட்டுமல்லாமல், அவரது மகன் ராஜா அன்பழகனிடம் அண்ணனின் உடல் நிலை குறித்து தொலைபேசியில் விசாரித்துக்கொண்டே இருந்தேன்.

இந்நிலையில், இன்று காலை அண்ணனின் மறைவுச் செய்தி குறித்து கேட்ட நிமிடம் முதல் இப்போது வரை அந்த உண்மைச் செய்தியை ஏற்க என் மனம் மறுக்கிறது. காரணம் அவரின் பழகும் தன்மை, நேர்மையான பேச்சு, அரசியலற்ற அன்பு, உண்மையைச் சொல்லும் துணிச்சல், எதிரே இருப்பவரின் இடத்தில் தன்னை நிறுத்திப் பார்த்து முடிவெடுக்கும் பண்பு… எனச் சொல்லிக்கொண்டே போகலாம். அவரிடம் நிறைந்திருந்த பல்வேறு குணாதிசயங்களை.

ஒரு அரசியல்வாதியுடன் சேர்ந்து படம் எடுப்பதா? என்கிற என்னுடைய ஐயத்தை எங்கள் முதல் சந்திப்பிலேயே தகர்த்தெறிந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நட்பை வளர்த்து என் உள்ளத்தில் குடிபுகுந்து கொண்ட ஆளுமை அவர். ஒரு நல்ல தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக, தயாரிப்பாளர் சங்கத்தின் மீது அக்கறை கொண்டவராக, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற தொலைநோக்குச் சிந்தனை கொண்டவராக இப்படி பல கோணங்களில் அவரை நான் வெகு அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.

அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரை இன்று நான் இழந்திருக்கிறேன் என்கிற வேதனையோடு மட்டுமல்லாமல், அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறவுகளின் உள்ளத்தில் சாந்தியையும் அவரது இறப்பிற்குப் பின் உள்ள வாழ்க்கையில் அமைதியையும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்”. என இயக்குனர் அமீர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்