“வீடு தொடங்கி வீதி வரை பெண்களுக்கு எதிரான வன்முறைகள்” விஜய் கருத்தை பிரதிபலிக்கும் கனிமொழி?
பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் இன்னும் தொடர்கிறது என்ற விஜயின் கருத்தை ஒற்றுபோய் தான் திமுக எம்பி கனிமொழியும் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் அரசியல் தலைவர்கள் முதல் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் என்பது நாள்தோறும் தொடர்கதையாகி கொண்டு தான் இருக்கிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் நடவடிக்கைகளை கடுமையாக்கவும், அதன் மீதான விசாரணையை துரிதப்படுத்தவேண்டிய சூழல் நிலவுகிறது. இதனை Global peace Index 2023 ரிப்போர்ட் அப்பட்டமாக வெளிப்படுத்தி காட்டுகிறது. பெண்கள் பாதுகாப்பில் உலகளவில் 163 நாடுகளின் தரவரிசையில் 126வது இடத்தில் தான் இந்தியா உள்ளது.
இதில் கொஞ்சம் தேற்றிக்கொள்ளும் விஷயம் என்னவென்றால், மாநில அளவில் பெண்கள் பாதுகாப்பில் கர்நாடகாவுக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது என்பதும், பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களின் தரவரிசையில் சென்னை மற்றும் கோவை ஆகியவை 5 மற்றும் 6வது இடத்தில் உள்ளன என்பதும் தான். இப்படி இருந்தும் தமிழகத்தில் அவ்வப்போது பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது என்றால் மற்ற மாநிலங்களின் நிலமை என்பது மோசமான நிலையிலேயே இருக்கிறது.
இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தவெக தலைவர் விஜய், பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பெண்கள் பாதுகாப்பில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ள விஜய், பெண்களின் பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது என தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளர்.
பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக குறிப்பிட்டு, அதனை தடுக்க ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவை நேரடியாக விமர்சித்துள்ளார். மேலும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற யோசனையை குறிப்பிட்டு அதனை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் தவெக தலைவர் விஜய்.
கிட்டத்தட்ட விஜய் கூறிய இதே கருத்தையே திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார் எனக் கூறப்படுகிறது. அதில் ஆளும் மாநில அரசின் மீதா விமர்சனம் தவிர்த்து அவர் பதிவிடுகையில், பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால், ஒருபோதும் விடுதலை அடைய முடியாது. ஆண்களுக்கு நிகராய் பெண்கள் அனைத்து விதத்திலும் உயர்ந்துள்ளனர்.
ஆனாலும், வீடு தொடங்கி வீதி வரை சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது என பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து நேரடியாக தனது ஆதங்கத்தை பதிவிவிட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க வேண்டும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியேற்போம் என பொதுவான அறிவுறுத்தலை மட்டும் பதிவிட்டுள்ளார் திமுக எம்பி கனிமொழி.
எது எப்படி இருந்தாலும், ஆள்வது திமுகவோ , அதிமுகவோ, மத்தியில் பாஜகவோ, காங்கிரஸோ பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்பது நாள்தோறும் தொடர்கதையாகி கொண்டு தான் இருக்கிறது. அதனை தடுக்க அரசு சட்டங்களை கடுமையாக்க வேண்டும். விசாரணைகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு துரிதப்படுத்த வேண்டும். உரிய நேரத்தில் கிடைக்கப்பெறாத நீதி மறுக்கப்பட்ட நீதியாகவே கருதப்படும்.