நீங்கள் சிறப்பாக வணிகம் செய்ய வேண்டுமா? ‘முக்தி’ நிலையில் இருங்கள்! ஈஷா ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் வர்த்தக தலைவர்களுக்கு சத்குரு ஆலோசனை
“நீங்கள் உங்கள் வணிகத்தை சிறப்பாக நடத்த விரும்பினால், நீங்கள் ‘முக்தி’ நிலையில் இருக்க வேண்டும். அனைத்து செயல்களிலும் முழுமையான ஈடுப்பாட்டோடும், அதேசமயம் அச்செயல்களில் சிக்கி போகாமலும் செயல் செய்ய வேண்டும்” என்று வர்த்தக தலைவர்களுக்கு சத்குரு ஆலோசனை வழங்கினார்.
ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில் ‘ஈஷா இன்சைட்’ என்ற பெயரில் வர்த்தக தலைவர்களுக்கான தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சி கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று (நவ.24) தொடங்கியது. முதல் நாளான நேற்று நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய சத்குரு, “நம் பாரத கலாச்சாரத்தில் முக்தியை வாழ்வின் குறிக்கோளாக கொண்ட ஒருவர் ஆன்மீக தேடல் உடையவராக பார்க்கப்படுகிறார். அத்தகைய நபர் எதையும் நம்பவும் மாட்டார், மறுக்கவும் மாட்டார். எப்போதும் உண்மை தேடுதலிலேயே பயணித்து கொண்டு இருப்பார்.
இந்த தன்மையானது தொழில் முனைவோராக விரும்புபவர்களுக்கு மிகவும் அவசியம். ஏனென்றால், தொழில்முனைவோர் ஒரு வர்த்தகம் செய்யும் நபர் மட்டுமல்ல. அவர் எப்போதும் தீர்வுகளையும், சாத்தியங்களையும் தேடி கொண்டு இருக்கிறார். இத்தகைய தேடல் உங்களுக்குள் இல்லாவிட்டால் நீங்கள் தொழில் முனைவோராக இருக்க முடியாது.
மேலும், உங்களுக்கும் உங்கள் உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்களுக்கும் இடையில் ஒரு இடைவெளியை உருவாக்கினால், உங்களின் நுண்ணறிவு வளர்ந்து தெளிவு பிறக்கும்” என்றார்.
Action without Insight is a blundering process. A little distance from our minds, thoughts & emotions will enhance Insight & make our actions Conscious, not Compulsive. Conscious action most important in Enterprise because Enterprises determine how people live. -Sg #IshaINSIGHT pic.twitter.com/OVLJlBw6Tc
— Sadhguru (@SadhguruJV) November 24, 2022
இந்நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக பங்கேற்ற ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் (ONDC) நிறுவனத்தின் சி.இ.ஓ, திரு. தம்பி கோஷி பேசுகையில், “இன்றைக்கு நாம் அறிந்த ஆன்லைன் வணிகம் என்பது இன்னும் சில காலங்களில் பொருத்தமற்றதாக மாறும். எனவே, வணிகத்தை மாற்றுவதற்கான எனது இறுதிக் கனவு என்னவென்றால், ஒவ்வொரு வகை விற்பனையாளரும் தங்கள் தயாரிப்புகளை ஒரு பொதுவான நெறிமுறையைப் பயன்படுத்தி திறந்த நெட்வொர்க்கில் விற்பனை செய்ய முயல வேண்டும்” என்றார்.
HLE கிளாஸ்கோட் லிமிடெடட் நிறுவனத்தின் இயக்குநர் திரு.அமித் கல்ரா, ஒரு நிறுவனத்தை, நல்ல நிறுவனம் என்பதில் இருந்து சிறப்பான நிறுவனமாக மாற்றும் செயல்முறையை வலியுறுத்தினார். “ஒரு நிறுவனத்தின் மூன்று தூண்கள் – மக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள். நிறுவனம் மூடப்பட்டால், அது மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள், ”என்று திரு கல்ரா கூறினார்.
வரும் 27-ம் தேதி வரை நடைபெறும் இந்த ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வர்த்தக தலைவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளனர். குறிப்பாக, சோனம் வாங்சுக், இயக்குனர், ஹிமாலயன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆல்டர்நேட்டிவ்ஸ், லடாக் (HIAL); குணால் பால், இணை நிறுவனர், ஏஸ்வெக்டர் குழுமம் (ஸ்னாப்டீல், யூனிகாமர்ஸ் மற்றும் ஸ்டெல்லாரோ); சந்திரசேகர் கோஷ், MD மற்றும் CEO, பந்தன் வங்கி., கஜேந்திர சிங் ஷெகாவத், ஜல் சக்திக்கான மத்திய அமைச்சரவை அமைச்சர்., கௌதம் சரோகி, நிறுவனர் & CEO, Go Colors -Go Fashion., Aequs-ன் தலைவர் & CEO அரவிந்த் மெல்லிகேரி உள்ளிட்டோர் ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.
ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில் 11 ஆண்டுகளாக நடத்தப்படும் ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் இதற்கு முன்பு ரத்தன் டாடா, என்.ஆர். நாராயண மூர்த்தி, கிரண் மஜூம்தார்-ஷா, ஜி.எம். ராவ், கே.வி. காமத், அஜய் பிரமல், ஹர்ஷ் மரிவாலா, அருந்ததி பட்டாச்சார்யா, பவிஷ் அகர்வால், பவன் கோயங்கா உள்ளிட்ட பல முன்னணி வர்த்தக தலைவர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.