தவெக முதல் மாநாடு: தொண்டர்களுக்கு அறிவுரை சொன்ன விஜய்.!
நமது ஒற்றுமையே நமது வலிமை என்பதை நாட்டுக்கு உணர்த்தும் வகையில் மாநாட்டு பணிகள் தொடர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற அக்டோபர் 27 தேதி நடைபெற இருக்கும் சூழ்நிலையில், தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நமது ஒற்றுமையே நமது வலிமை என்பதை நாட்டுக்கு உணர்த்தும் வகையில் மாநாட்டு பணிகள் தொடர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், தவெக தொண்டர்களுக்கு தோழர்களே எனக் குறிப்பிட்டு மாநாட்டிற்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார். மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களின் பொறுப்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டு, வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம் என்றும் நெகிழ்ந்துள்ளார்.
தொண்டர்களுக்கு விஜய் அறிவுரை
- மக்கள் இயக்கமாக இருந்த நாம் மக்களோடு மக்களாக களமாடி அரசியல் உரிமைகளை வென்றெடுக்கப் போகிறோம்.
- பொறுப்பான மனிதனைத்தான் குடும்பம் மதிக்கும். பொறுப்பான குடிமகனைத்தான் நாடு மதிக்கும். நமது கட்சியினர் பொறுப்பாக, பிறருக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்பதே என் விருப்பம்.
- மாநாடு முடியும் வரை தொண்டர்கள் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்க வேண்டும். மற்ற அரசியல் கட்சிகள் போல் சாதாரண இயக்கமன்று, இது ஆற்றல் மிக்க பெரும்படை. நாம் கூடும் இடத்தில் கட்டுப்பாடு, பக்குவம் நிறைந்திருக்கும் என்பதை நிரூபிக்க வேண்டும்
- மாநாடு நடக்கும் வேளையில் கொண்டாட்டம் இருக்கலாம்,குதூகலம் இருக்கலாம். ஆனால், கட்டுப்பாடு மிகவும் முக்கியம். அரசியல் களத்தில் வேகமாக இருப்பதை விட விவேகமாக இருப்பது மிகவும் முக்கியம் என்று கூறியுள்ளார்.
- மக்களுக்காக உழைக்க வேண்டும் என்றும் அடிப்படை தேவைகளை நிரந்தரமாக பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், விவேகமாக செயல்பட்டு எச்சரிக்கையாக களமாடுவது இன்னும் அவசியமானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.