தமிழகத்தில் இதை செய்யுங்கள்! முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த அமித்ஷா!
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ் வழியில் வழங்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

சென்னை : இன்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப் பயிற்சி மையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது. அதன் பின், ராணுவ அணிவகுப்பு மரியாதையை அமித்ஷா பார்வையிட்டுவிட்டார்.
அதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழ் மொழி குறித்து சில விஷயங்களை பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” தமிழர்களின் பாரம்பரியம் பார்க்கையிலும், கலாச்சாரமும் இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரத்தை வலுப்படுத்துகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான் சிஐஎஸ்எப் தேர்வு தமிழ் மொழிகளில் கூட எழுத முடிகிறது.
எனவே, தமிழ் மட்டுமில்லை..ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு பல விஷயங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அடுத்ததாக மத்திய அரசு முக்கிய நடவடிக்கையாக மருத்துவம், பொறியியல் படிப்புகளும் மாநில மொழிகளில் படிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” எனவும், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ் வழியில் வழங்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமித்ஷா பேசினார்.
முன்னதாக மும்மொழி கொள்கை விவகாரம் வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் தமிழுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தரவில்லை என குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக அமித்ஷா இப்படி பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.