தமிழகத்தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்களா ? சீமான் அறிக்கை
இனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இரு இனங்களிடையே பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கணிப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கையில், தமிழர், சிங்களர் எனும் இரு இனங்களிடையே தமிழக அரசியல் தலைவர்கள் பகைமையையும், துவேசத்தையும் உண்டாக்குவதாக மகிந்தா ராஜபக்சேவின் மகனும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சே கூறியிருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட நச்சுக்குண்டுகளை வான்வழித்தாக்குதலின் மூலம் வீசி, ஒரு உள்நாட்டுப்போரை நடத்தி இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்த இனப்படுகொலையாளன் மகிந்தா ராஜபக்சேவின் மகன் சமாதானத்தையும், அமைதியையும் பற்றி நமக்குப் பாடமெடுப்பது நகைப்புக்குரியது.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்திய அரசின் நிலைப்பாடுகளுக்கு எதிரானவர் என்பது மட்டுமல்ல, சீனாவில் ஆதிக்கத்திற்கு துணைபோகிறவரும்கூட. அவரது சீன ஆதரவு செயல்பாடுகள் இந்தியாவின் இறையாண்மைக்கே பேராபத்தினை விளைவிக்கக்கூடும் என்பதனை உணர்ந்து, இனியாவது இந்தியப் பேரரசு தார்மீகத்தோடு தமிழர்கள் பக்கம் நிற்க முன்வர வேண்டும்.
ஆகவே, உலகத்தமிழர்களின் நெடுநாள் கோரிக்கையான ஈழ இனப்படுகொலைக்குத் தலையீடற்ற ஒரு பன்னாட்டுப் பொது விசாரணை மற்றும் அதனைத் தொடர்ந்து தனித்தமிழீழம் அமைவதற்கான ஒரு பொது வாக்கெடுப்பு ஆகியவைகள் நடத்தப்படுவதற்கான ஒரு சூழலை இந்திய அரசும், பன்னாட்டுச்சமூகமும் ஏற்படுத்தித் துயருற்று இருக்கிற தமிழர் வாழ்வில் விடிவை ஏற்படுத்தித்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.