மாஞ்சோலை விவகாரம் : ‘குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம்’ – தனியார் எஸ்டேட் நிறுவனம் சுற்றறிக்கை
மாஞ்சோலை : மாஞ்சோலை குடியிருப்புகளை மறு உத்தரவு வரும் வரை தொழிலாளர்கள் காலி செய்ய வேண்டாம் என தனியார் எஸ்டேட் நிறுவனம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.
மாஞ்சோலை விவகாரத்தில் அங்குள்ள தொழிலார்களில் ஒருவரான அமுதா என்பவர் மாஞ்சோலையிலிருந்து பிபிடிசி நிறுவனம் வெளியேறுவதால் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு உதவிகள், கலைஞரின் கனவு இல்லம், அரசு ரப்பர் கழகம், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் மற்றும் அங்கன்வாடிகளில் வேலைவாய்ப்பு, குழந்தைகளுக்கு இலவச கல்வி, மாற்றுப்பணி வழங்க வேண்டும் எனவும் அதுவரை ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்ற தடை விதித்தும், தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் மின்சார வசதி வழங்கிட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு நடந்த விசாரணையில், தேயிலை தோட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் எனவும் அல்லது தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு ஏதேனும் வழங்க வேண்டும்.
இது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் அதுவரை அங்குள்ள தோட்டத் தொழிலாளர்களை மாஞ்சோலையிலிருந்து வெளியேற்ற விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் அதோடு தொழிலரகளுக்கு 75 சதவீத பணப்பலன்களையும் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கை ஜூலை 22-க்கு ஒத்திவைத்தது. இந்நிலையில், இன்றைய தனியார் நிறுவனம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “மாஞ்சோலை குடியிருப்புகளில் வசித்து வரும் தொழிலாளர்கள் மறு உத்தரவு வரும் வரை காலி செய்ய வேண்டாம். ஏற்கெனவே 25 சதவீத கருணைத் தொகை வழங்கப்பட்டுவிட்டது. மேலும், மீதமுள்ள 75% சதவீத கருணைத் தொகையை உதவி தொழிலாளர் ஆணையரிடம் 3 நாட்களில் கொடுத்து விடுவோம்” என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.