“வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம்” – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து, முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என்று வீண் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் தற்பொழுது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதன்காரணமாக பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டு, கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வுகளை மேற்கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேலும் 300 படுக்கைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கொரோனா நோயாளிகளுக்கு அறிகுறிகள் அடிப்படையில் 3 பிரிவுகளாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. தஞ்சையில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளித்தும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என்று வீண் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.