கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக் கூடாது – அமைச்சர் ஜெயக்குமார்
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக் கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி கட்சிக்குள் எழுந்தது.இதனால் முதல்வர் பழனிசாமி ஆதரவாளர்கள் அவரை முதலமைச்சர் வேட்பாளர் என்றும் , துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அவரை முதலமைச்சர் வேட்பாளர் என்று கூறி வந்தனர் .இந்த கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து காரசார விவாதம் நடந்ததாக தகவல் வெளியாகியது.
செயற்குழுக் கூட்டம் முடிந்த பின்னர் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை வருகின்ற 7-ஆம் தேதி அறிவிக்கப்படும் என அக்கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுகவைப் பொறுத்தவரை அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கும் முதல்வர் யார் என்பதில் போட்டி கிடையாது. முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை. அடுத்த ஆட்சி அதிமுக தான், அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என கூறினார்.இது மீண்டும் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், முதலமைச்சர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு அக்டோபர் 7-ஆம் தேதி வெளியாகும் .செயற்குழு கூட்டம் பற்றி வெளியில் கருத்து கூறக்கூடாது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக் கூடாது.அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உட்பட யாராக இருந்தாலும் கட்டுப்பாடு ஒன்றுதான்.அதிமுகவில் எப்போது பிரச்சினை வரும் என எதிரிகள் எதிர்பார்க்கிறார்கள்.அமைச்சர்களும், தொண்டர்களும் அதற்கு இடம் அளிக்கக்கூடாது.ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தனித்தனியாக ஆலோசனை நடத்துவதில் தவறில்லை என்று தெரிவித்துள்ளார்.