மாணவர்களுக்கு சளி, காய்ச்சல் அறிகுறி இருந்தால் கூட பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் – பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!
பிள்ளைகளின் உடல் சீராக இருக்கிறது என்ற முழு நம்பிக்கை இருந்தால் மட்டுமே பள்ளிக்கு அனுப்பவும், மற்றபடி சளி, தலைவலி ஏதேனும் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கு முதல் தற்பொழுது வரையிலும் பள்ளி கல்வி துறை, கல்லூரிகள், போக்குவரத்து தொழிற்சாலை என அனைத்துமே முடக்கப்பட்ட நிலையில் தான் இருக்கிறது. இயல்பு வாழ்க்கை இன்னும் மக்களிடத்தில் திரும்பவில்லை என்றுதான் கூறியாக வேண்டும். இந்நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தற்போது தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளிகளை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பள்ளிக்கூடம் துவங்கப்பட்டு இரண்டு மூன்று தினங்களே இருக்கும் நிலையில் சேலம் மாவட்டத்தில் மாணவி ஒருவருக்குகொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து பள்ளிக்கு வந்திருந்த அனைத்து மாணவர்களும் தற்பொழுது கண்காணிப்பில் இருக்கின்றனர். இதனால் தற்பொழுது பள்ளி கல்வித்துறை சார்பில் பெற்றோர்களுக்கு சில எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நோய் தொற்று காலம் என்பதால் மிக கவனமுடன் பெற்றோர்கள் செயல்படுமாறும், பிள்ளைகள் உடல் சீராக இருக்கிறதா என்பதை கவனித்து அதன் பின் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் எனவும் சளி, தலைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கூட பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.