கொரோனாவுக்கு சாதி, மதச்சாயம் பூச வேண்டாம்- முதல்வர்
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கடந்த 8 முதல் 20ம் தேதி வரை மாநாட்டில் கலந்துகொண்டு ஊர் திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த மாநாட்டில் இந்திய மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்த 411 பேரில் 364 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்று வந்தவர்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்திருந்தார். இதுபோன்று பல மாநிலங்களில் மாநாட்டில் பங்கேற்று வந்தவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநாட்டில் பங்கேற்று வந்தவர்கள் தாமாக முன்வந்து மருத்துவ சுய பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் பல்வேறு சர்ச்சையான பேச்சுக்கள் கிளம்பியது. இதனால் கொரோனாவுக்கு சாதி, மதச்சாயம் பூச வேண்டாம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது ஒரு நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றும் மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பின்னர் அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக மதத்தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்கள் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது என்றும் நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளுக்கும் மற்றும் சென்னையில் அதிகபட்சமாக 11 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை கூறியுள்ளது.