ரூ.2000 -க்காக 5 ஆண்டுகளை அடகு வைத்து விடாதீர்கள்- பாஜக துணைத் தலைவர் பேச்சு
கொள்ளையடித்த பணத்தை ,மக்களிடமே தேர்தல் நேரத்தில் 2000 கொடுப்பது தான் தமிழக அரசியல் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் பழனிசாமி,அப்பொழுது அவர் பேசுகையில், ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதையொட்டி ,ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவித்தார்.2.06 கோடி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.முதலமைச்சரின் அறிவிப்பிற்கு ஆதரவு ஒரு புறம் இருந்தாலும் மறு புறம் எதிர்ப்பும் இருந்து வருகிறது.
அந்தவகையில் கோவையில் பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை பேசுகையில், மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தை ,மக்களிடமே தேர்தல் நேரத்தில் 2000 கொடுப்பது தான் தமிழக அரசியல்.மோடி அரசு என்பது வேறு. ஆறு ஆண்டுகாலமாக ஒரு ஒரு தனி நபரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி ,பெண்களை தலைநிமிர வைப்பது.விவசாயியின் முதுகெலும்பை நேராக நிற்க வைப்பதற்கு ,அவர்களது வங்கி கணக்கில் 6000 ரூபாய் மோடி அவர்கள் வழங்குகிறார். இரண்டாயிரம் ரூபாய்க்காக 5 ஆண்டுகள் உங்கள் வாழ்க்கையை அடகு வைத்து விடாதீர்கள்.இந்த நிலை நீடித்தால் தலையில் சீரியல் லைட் மாட்டிக்கொள்பவர்களும், டயரில் விழுந்து கும்பிடுபவர்களும் தான் ஆட்சிக்கு வருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் இது முதலமைச்சர் அறிவித்த பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்ற அறிவிப்போடு சேர்த்து வரும் நிலையில் ,இதற்கு அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.அதாவது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,சில ஊடகங்கள், பொங்கலுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் மக்களுக்கு ரூபாய் 2500 கொடுக்க இருப்பதை நான் எதிர்ப்பதுபோல, கோயம்புத்தூரில் நான் சொன்னதாக, தவறாக சித்தரித்து கூற முயற்சிக்கிறார்கள், அதை பிரசுரமும் செய்கிறார்கள் .பொங்கலுக்கு கொடுக்கும் தொகையை முதலமைச்சர் அவர்கள் ரூபாய் ஆயிரத்திலிருந்து இரண்டாயிரத்து ஐநூறாக உயர்த்தி இருப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். கொரோனா இருக்கும் இக்காலகட்டத்தில், அரசாங்கம் வழங்கும் இந்த பணம் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று விளக்கம் அளித்துள்ளார்.
பொங்கலுக்கு கொடுக்கும் தொகையை முதலமைச்சர் அவர்கள் ரூபாய் ஆயிரத்திலிருந்து இரண்டாயிரத்து ஐநூறாக உயர்த்தி இருப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். கொரோனா இருக்கும் இக்காலகட்டத்தில், அரசாங்கம் வழங்கும் இந்த பணம் மக்களுக்கு உதவியாக இருக்கும்
— K.Annamalai (@annamalai_k) December 21, 2020