யாருடைய பேச்சையும் காதில் வாங்காதீர்கள்! இதில் மட்டும் கவனம் செலுத்துங்க – முதலமைச்சர்

Default Image

நான் தமிழக முதல்வராக வரவில்லை! உங்களில் ஒருவனாகத்தான் வந்திருக்கிறேன் என கல்லூரி கனவு நிகழ்ச்சியில் முதலமைச்சர் உரை.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரிவு வாரியான பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு, கல்லூரிகளை தேர்வு செய்வது குறித்து வழிகாட்டுதல் தர ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், நம்முடைய இளைஞர்களில் பல முதல்வர்களை உருவாக்கும் இந்தத் திட்டத்துக்கு, நான் தமிழக முதல்வராக வரவில்லை! உங்களில் ஒருவனாகத்தான் வந்திருக்கிறேன்.

அந்த நாற்காலியில் ஒவ்வொருவரையும், “நான் முதல்வன்” என்று கம்பீரமாக நீங்கள் சொல்லி, உங்களுடைய துறையில் முதல்வராக நீங்கள் வீற்றிருந்து, அந்த நாற்காலியை அலங்கரிக்கச் செய்வதுதான் என்னுடைய கடமை. சாதி, மதம், பணம், அதிகாரம், வயது, அனுபவம், குடும்பம், பதவி, நாடுகள், வளர்ச்சி ஆகிய அனைத்தின் தன்மையும், ஆளுக்கு ஆள், நேரத்துக்கு நேரம். நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஆனால் அறிவு மட்டும்தான் அனைத்தையும் கடந்து ஒரே அளவுகோலோடு அளவிடப்படுகிறது. இங்குப் பிறந்த திருவள்ளுவர் உலக ஞானியாக போற்றப்படுவதும், ஜெர்மனியில் பிறந்த காரல் மார்க்ஸ் உலகச் சிந்தனைவாதியாக மதிக்கப்படுவதும்தான் அறிவுலகத்தின் ஆற்றல்.

கல்வியால் அடையும் புகழ்தான் நிலையானது. அதற்கான அறிவுலகப் பயணத்தின் அடுத்தகட்டத்துக்குள் நுழையும் எனது பிள்ளைகளை ஒளிபடைத்த கண்ணினாய் வா வா என்று அழைத்து வாழ்த்துகிறேன். தவழும் குழந்தை தவறி விழுந்தால், தாங்கிப் பிடிக்கும் தாயின் கரங்கள்! அதே குழந்தை வளர்ந்து வெற்றிக்கொடி நாட்டும்போது, தாயின் கண்கள் ‘வானமே எல்லை’ என்று சுட்டிக்காட்டும். அந்த வகையில், இந்த நிகழ்ச்சி வெறும் வழிகாட்டி நிகழ்ச்சி மட்டுமல்ல கல்வி, விளையாட்டு, கலைத்திறன் தொழில்நுட்பம் என்று ஒவ்வொரு துறையிலும் தமிழக இளைஞர்களை வெற்றியாளர்களாக, செதுக்கிய நிகழ்ச்சிதான் இது.

கல்வியை சிறுமைப்படுத்தி பேசக்கூடிய யாருடைய பேச்சையும் காதில் வாங்காதீர்கள். படிப்பில் கவனம் செலுத்துங்கள், உயர்படிப்புகளையெல்லாம் கற்றுத் தேறுங்கள், அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்கள் எனப் பார் புகழ நீங்கள் விளங்க வேண்டும். உங்களையெல்லாம் ‘அவையத்து முந்தியிருக்கச் செய்யும்’ தந்தை எனும் பொறுப்பை நான் ஏற்கிறேன். படியுங்கள், பகுத்தறிவோடு சிந்தியுங்கள், உங்கள் சிறகுகளை விரித்து உலகம் எனும் பரந்த வெளியில் சிறகடித்து திரியுங்கள். உங்களுக்குப் பின்னால் வருபவர்களுக்கு நீங்கள் வழிகாட்டிகளாய் திகழுங்கள் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்