மக்களே 11 மணிக்கு பிறகு வெளியே செல்லவேண்டாம்…அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்.!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, கோடை காலநிலையில் பாதுகாப்பாக இருப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று கோடைக்காலத்தில் வெப்பத்தின் கடுமையைத் தவிர்ப்பது மற்றும் அதற்கேற்ப நமது வாழ்க்கை முறையை எவ்வாறு மாற்றிக் கொள்வது என்பது குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது ” கோடைகாலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே, காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்லுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக சிறுவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் இந்த நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் .
வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. எனவே, கடுமையான வெயிலின் காரணமாக தலைவலி, தலைச்சுற்றல், படபடப்பு, தசைப்பிடிப்பு, வலிப்பு, சுயநினைவு இழப்பு போன்ற பாதிப்புகள் வெப்பத்தால் ஏற்பட வாய்ப்புள்ளது. வெப்பத்தின் தாக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். எலுமிச்சை, தர்பூசணி, முலாம்பழம் பழச்சாறுகள், மோர், லஸ்ஸி போன்றவற்றை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.
மக்கள் மெல்லிய, வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணிந்து தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள், முதியவர்கள், வெளியில் வேலை செய்பவர்கள், இதயநோய் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம், மனநல கோளாறுகள் உள்ளவர்கள் வெயிலின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே இவர்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
மேலும். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிபாக தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு, சேலம், நாமக்கல்லில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு அதிகமாக வெப்பம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.