‘வதந்திகளை நம்பாதீர்கள்’- தமிழகத்திற்குள் ஓமைக்ரான் இன்னும் வரவில்லை..! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்திற்குள் ஓமைக்ரான் இன்னும் வரவில்லை. வதந்திகளை நம்பாதீர்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, தேனாம்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் 11 நாடுகளில் இருந்து மதுரை, கோவை, திருச்சி ஆகிய விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சர்வதேச விமான நிலையங்களில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஓமைக்ரான் பாதிப்பு குறித்து மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை, அரசு வெளிப்படைத் தன்மையுடன் இருக்கிறது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்பவர்கள் கவனத்துடன் பதிவு செய்ய வேண்டும். சென்னை, திருச்சியில் ஓமைக்ரான் பரவியுள்ளதாக பரவும் செய்தி தவறானது. தமிழகத்திற்குள் ஓமைக்ரான் இன்னும் வரவில்லை. வதந்திகளை நம்பாதீர்கள் என தெரிவித்துள்ளார். மேலும், ஓமைக்ரான் வைரஸை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், 6 அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.