புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக திமுகவின் சட்டப்போராட்டம் தொடரும் – மு.க.ஸ்டாலின்
புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக திமுகவின் சட்டப்போராட்டம் தொடரும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு உலவிடுமா என்று நாட்டு மக்கள் அஞ்சுகிற அளவுக்கு, அதன்மீது ஊரடங்கு காலத்தில் ஒரு நூறு தாக்குதல்களைத் தொடர்ந்து தொடுத்துக் கொண்டிருக்கிறது மத்தியில் ஆளுகின்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு.
அனைவருக்கும் சமமான கல்வி என்பதற்கு, நூறாண்டு கால ‘மாடல்’ நம் தமிழ்நாடுதான். நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தக் கல்விப் புரட்சி, பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக்காலத்தில் பள்ளிக்கல்வியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித்துறையில் சாதனைகளைப் புரிந்தது. இந்தியாவின் பல மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி பயின்றோர் மட்டுமின்றி, உயர்கல்வி கற்றோரின் எண்ணிக்கையும் விகிதமும் கூடுதலாக உள்ளது. மதிய உணவு – சத்துணவு – முட்டையுடன் உண்மையான சத்துணவு போன்ற திட்டங்களால் பள்ளியில் இடைநிற்றல் குறைக்கப்பட்டு, சமச்சீர்க் கல்வி முறை வாயிலாக நல்ல மதிப்பெண்கள் பெற்று, உயர்கல்வியில் தொழிற்படிப்புகளைத் தேர்வு செய்து மருத்துவர்களாக – பொறியாளர்களாக – வேளாண்துறை வல்லுநர்களாகச் சிறப்பான இடத்தைப் பெறக்கூடிய நிலையில் தமிழக மாணவர்கள் இருக்கிறார்கள்.
இந்த ஆபத்துகளை உணர்ந்துதான் எதிர்க்கட்சியான தி.மு.கழகம் புதிய கல்விக் கொள்கையைத் துணிந்து எதிர்க்கிறது. அது குறித்து விரிவாக விவாதித்து, மாற்றுச் செயல்திட்டங்களை வகுப்பதற்காக நாளை (2-8-2020) உங்களில் ஒருவனான எனது தலைமையில் கழக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் வரவேற்புரையாற்ற, கல்வியாளர்களான முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, பேராசிரியர் கருணானந்தம், விஞ்ஞானி ராமானுஜம், பொதுக் கல்விக்கான மாநில மேடை அமைப்பின் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மருத்துவர் எழிலன் உள்ளிட்டோர் பங்கேற்றுக் கருத்துரை வழங்கும் ‘புதிய கல்விக்கொள்கை 2020’ எனும் காணொலி நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
அதன் மூலம், கழக உடன்பிறப்புகளும் பொதுமக்களும் புதிய கல்விக் கொள்கையின் ஆபத்துகளை அறிந்துகொள்ளும் வகையில், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஞாயிறு காலை 10 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பாகிறது.எதிர்க்கட்சியான தி.மு.கழகமும் தோழமை இயக்கங்களும் புதிய கல்விக் கொள்கையின் பேராபத்தை உணர்ந்து அதற்கு எதிர்வினையாற்றும் நிலையில், மாநில உரிமைகளை மொத்தமாகப் பறிக்கின்ற வகையில் செயல்பாட்டுக்கு வரவிருக்கும் இந்தக் கல்விக்கொள்கை குறித்து தமிழ்நாட்டை ஆளுகின்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு என்ன நிலைப்பாடு கொண்டிருக்கிறது என்பது ஆள்வோருக்கும் தெரியவில்லை; பொதுமக்களுக்கும் அவர்களின் நிலைப்பாடு புதிராக இருக்கிறது.
மத்திய பா.ஜ.க. அரசு என்றாலே தொடை நடுங்கும் மாநில ஆட்சியாளர்கள், தமிழக மாணவர்களின் நலனை பலி கொடுக்கத் தயாராகிவிட்டார்களா? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சார்பிலோ, உயர்கல்வித்துறை அமைச்சர் சார்பிலோ எந்த தெளிவான அறிக்கையும் 31-7-2020 வரை வெளிவராத நிலையில், உணவுத்துறைக்கு அமைச்சராக இருப்பவர், புதிய கல்விக்கொள்கை குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் எனப் பேட்டியளிக்கிறார். துறை சார்ந்த அமைச்சர்களைக் கடந்து, சூப்பர் முதல்வர்களாகச் செயல்படும் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையின் ‘நீயா-நானா’ என்கிற அதிகாரப் போட்டியால், தமிழகத்தின் ஒட்டுமொத்த அதிகாரமும் மத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது.
புதிய கல்விக்கொள்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றவேண்டிய ஆட்சியாளர்கள் வாய்மூடிக் கிடக்கின்ற நிலையில், பொதுமக்களின் மனதை ஆட்சி செய்கின்ற தி.மு.கழகம் தனது தோழமை சக்திகளுடன் இணைந்து நின்று, தமிழகத்தின் கல்வி நலன் காக்கின்ற முயற்சியை மேற்கொள்ளும்; மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத பிற மாநில முதல்வர்கள் – அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோருடன் தொடர்பு கொண்டு, இந்திய மாணவர்களின் எதிர்கால நலன் காக்கும் ஒருங்கிணைப்பு முயற்சிகளையும், அதற்கான சட்டப் போராட்டங்களையும் தொடர்ந்து மேற்கொள்ளும்.
இந்தியாவைச் சிதைக்கும் பேரபாய சக்திகளுக்கு எதிராக அணி திரள்வோம்! இடஒதுக்கீடு வழக்கைப் போல, இன்னல் தரும் கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வென்று காட்டுவோம்! சமூக நீதி காப்போம்! சமத்துவக் கல்வி வளர்ப்போம்!
“சமூகநீதி காத்து, சமத்துவக் கல்வி வளர்ப்போம்!”
– கழக தலைவர் @mkstalin அவர்கள் எழுதியுள்ள மடல்.
Link: https://t.co/cW5SGAfCAY#NEP2020 pic.twitter.com/6AzOHGTPdh
— DMK (@arivalayam) August 1, 2020