மு.க.ஸ்டாலின் பெயரில் முதல் விருது., பெரியார், அண்ணா, கலைஞர் விருது யார் யாருக்கு.?
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி , மு.க.ஸ்டாலின் பெயரில் வழங்கப்படும் விருதுகளை இந்தாண்டு வாங்குவோர் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை : திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) தொடங்கி 75 ஆண்டுகள் ஆனதை அடுத்து இன்று (செப்டம்பர் 17) திமுக பவள விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் வெகு பிரமாண்டமாக நடைபெற உள்ளது. தந்தை பெரியார் பிறந்த தினம் , அறிஞர் அண்ணா பிறந்த தினம், திமுக தொடங்கிய நாள் என முப்பெரும் விழாவாக இந்த விழா நடைபெற உள்ளது.
திமுக கட்சியானது அறிஞர் அண்ணாவால், 1949ஆம் ஆண்டு தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும், திமுக தோன்றிய நாளில், தந்தை பெரியார் , அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன் பெயரில் விருதுகளானது, திமுகவில் சிறப்பாக பணியாற்றி வரும் மூத்த நிர்வாகிகளுக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்தாண்டு புதியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரிலும் விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விருது பட்டியல் :
பெரியார் விருது : 108வயதை கடந்த திமுகவின் மூத்த நிர்வாகியான திருமிகு பாப்பம்மாளுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். 1965இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர். 1962 முதல் திமுகவில் இணைந்து தீவிரமாக பணியாற்றி வருபவர். தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தில் நீண்ட ஆண்டுகள் பணியாற்றியவர்.
அண்ணா விருது : திமுகவின் மூத்த நிர்வாகி அறந்தாங்கி ‘மிசா’ இராமநாதனுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. 1976ஆம் ஆண்டு மிசா போராட்டத்திலும், இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் பங்குபெற்றவர்.
கலைஞர் விருது : திமுக எம்.பி எஸ்.ஜெகத்ரட்சகனுக்கு இந்த விருது வழங்ப்படுகிறது. ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 5 முறை எம்.பியாகவும் தேர்வு செய்யப்பட்டுளார். 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
பாவேந்தர் விருது : 2008ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு கவிஞர் தமிழ்தாசனுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்தி திணிப்பு போராட்டத்தில் பங்குபெற்றவர். பள்ளிப்பருவத்தில் இருந்து தமிழின் மீது ஆர்வம் கொண்ட இவர் 36 புத்தகங்களை எழுதியுள்ளார்.
பேராசிரியர் விருது : இந்தாண்டு இவ்விருது வி.பி. இராசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 17 வயது முதல் திமுகவில் இணைந்து பணியாற்றி வருகிறார். 1969இல் அண்ணா அறிவாலயம் எனும் படிப்பகத்தை தொடங்கியவர். கலைஞரால் “புலிக்குட்டி” என பெயர் வாங்கியவர்.
மு.க. ஸ்டாலின் விருது : இந்தாண்டு முதல் புதியதாக இவ்விருது அறிமுகம் செய்யப்பட்டு, முதன் முதலாக எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இவர் 6 முறை தஞ்சை மாவட்த்தில் இருந்து எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டவர். ஐநா சபையில் திமுக சார்பில் பேசியவர். 9 ஆண்டுகள் மத்திய இணை அமைச்சராக இருந்துள்ளார். தற்போது கழக உயர்நிலை செயல்திட்ட குழுவில் செயல்பட்டு வருகிறார்.
மேற்கண்ட நபர்களுக்கு விருதுகள் இன்று மாலை சென்னை ஒய்.எம்.சி.ஆர் மைதானத்தில் நடைபெறும் திமுக பவளவிழா உள்ளிட்ட முப்பெரும் விழாவில் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.