திமுக இளைஞரணி மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலத்திற்கு பயணம்!
திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நாளை பிரமாண்டமாக சேலத்தில் நடைபெற உள்ளது. மிக்ஜாம் புயல், தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு காரணமாக திமுக இளைஞரணி மாநாடு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் நாளை நடைபெறுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு உள்ளது.
திமுக இளைஞரணி தலைவரும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு நிகழ்வுகள் இன்று முதலே துவங்குகிறது. இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மாநாட்டிற்கான சுடர் தொடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு.. பிரதமர் வருகை.! அண்ணாமலை முக்கிய தகவல்.!
இதன்பின் அவர் கூறியதாவது, இந்த மாநாட்டில் 3ல் இருந்து 4 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். மாநாட்டிற்கு வருபவர்களுக்கு போக்குவரத்து, உணவு, இருக்கை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. மாநில உரிமைகள் மீட்பு மாநாடு என்ற தலைப்பில் தான் மாநாடு நடைபெற உள்ளது. இன்று மாலை மாநாடு நடைபெறும் பந்தலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவுள்ளார்.
அப்போது, அவர் கையில் சுடர் கொடுக்கப்பட்டு, மாநாட்டின் நிகழ்வுகளை தொடங்கி வைப்பார் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சேலத்தில் நாளை நடைபெறவுள்ள 2வது திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். இளைஞரணி மாநாட்டு பந்தலுக்கு சென்று இருசக்கர வாகன பேரணியையும், ட்ரோன் ஒளிக் காட்சியையும் முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட உள்ளார்.