திமுக செயற்குழு தீர்மானங்கள்: அமித்ஷாவை கண்டித்து… பேரிடர் நிவாரண நிதி வரை!
மதுரை டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து திமுக செயக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உட்பட 850க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக செயற்குழுவில், முதல் தீர்மானமாக அண்ணல் அம்பேத்கரை நாடாளுமன்றத்தில் அவமதித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், புயல் வெள்ள நிவாரணமாக ரூ.2,000 கோடி நிதி வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தி, உரிய நிதியை வழங்காமல் வஞ்சிப்பதாக மத்திய அரசுக்கு திமுக செயற்குழு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை தொடர்ந்து, டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல சட்டத்தை ஆதரித்த அதிமுக, பாஜகவை கண்டித்தும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இயற்கை சீற்றத்தால் பாதிப்புக்குள்ளான மாநில அரசு கேட்கும் பேரிடர் நிதியை விரைவில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிட வேண்டும் என மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்பொழுது, திமுக செயற்குழுவில் பங்கேற்பவர்களுக்கு அரசின் துறைரீதியிலான சாதனைகளை விளக்கும் ‘திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள்’ புத்தகம் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், இந்த செயற்குழுவில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு மதிய உணவும் தயாராகி கொண்டிருக்கிறது.