#Breaking:திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு- தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
நாமக்கல் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை முதல்வரும்,திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது தொடங்கி வைத்துள்ளார்.“உள்ளாட்சியிலும் நல்லாட்சி” என்ற தலைப்பில்,காலை 9.30 முதல் மாலை 5.30 வரை நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
மேலும்,திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்,எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்,டிஆர்பாலு உள்ளிட்டோரும் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில்,மத்தியில் கூட்டாட்சி-மாநிலத்தில் சுயாட்சி என்ற தலைப்பில் எம்பி ஆ.ராசா,திமுக உருவாக்கிய ‘நவீன தமிழ்நாடு’ என்ற தலைப்பில் எம்பி திருச்சி சிவா,இதுதான் திராவிட இயக்கம் என்ற தலைப்பில் சுப.வீரபாண்டியன் ,திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம் என்ற தலைப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு,பெண்களின் கையில் அதிகாரம் என்ற தலைப்பில் பர்வீன் சுல்தானா ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து,மதியம் 2.30 மணி முதல் 3.30 மணி வரை ‘மக்களோடு நில்,மக்களோடு வாழ்’ என்ற தலைப்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உரையாற்றுகிறார். அதன்பின்னர்,மாலை 4 மணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.மாநாட்டின் இறுதியாக அமைச்சர் மதிவேந்தன் நன்றியுரை கூறுகிறார்.
இதனிடையே,முதல்வரின் வருகையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும்,டிரோன் கேமராக்கள் மூலமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.