தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரை கண்டித்து திமுக சார்பில் இன்று போராட்டம்! ஆர்எஸ்பாரதி அறிவிப்பு!
திமுக சார்பில் 07-01-2025 காலை 10 மணியளவில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில், ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்பட்டது. ஆனால், சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் சட்டப்பேரவையில் இருந்து திடீரென வெளியேறினார். அவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடியதாகவும், தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என்ற தன்னுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாலும் உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதாக மாளிகை தரப்பில் இருந்து விளக்கமும் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில். தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்து வதாக கூறி ஆளுநரைக் கண்டித்தும் திமுக சார்பில் இன்று 07.01.2025 காலை 10 மணியளவில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி அறிவித்துள்ளார்.
இது குறித்து வெளியான அறிக்கையில் ” பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அமைதியாக இருக்கும் ஆளுநர்கள், பா.ஜ.க அல்லாத மாநில அரசுகளில் தனி ராஜாங்கம் நடத்த முயல்கிறார்கள். ஆளுநர் மாளிகைகளை வைத்து மாநில நிர்வாகத்தை முடக்குவதை ஒரு வாடிக்கையாகவே வைத்திருக்கிறது மோடி அரசு. அதன் வெளிப்பாடுதான் இன்றைக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வு.
ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மாநில உரிமைகளை சிதைத்து, மாநில சுயாட்சியை பறிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். 2023-ம் ஆண்டு சட்டமன்றத்தில் ஆளுநர் ரவி உரையாற்றிய போது, மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் ஆகிய சொற்களை உச்சரிக்கவில்லை. ’அரசு கொடுத்த உரையில் இருப்பதுதான் அவை குறிப்பில் இடம்பெறும்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அப்போதே நேருக்கு நேர் பதிலடி கொடுத்ததும், ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் அவையில் இருந்து வெளியேறினார்.
2024-ம் ஆண்டு ஆளுநர் உரையின் தொடக்கத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்படுகிறது, தேசிய கீதம் பாடப்படுவது இல்லை எனக்கூறி உரையை வாசிக்காமல் அமர்ந்தார் ஆளுநர் ரவி. முந்தைய ஆண்டில் கூறிய அதே துருப்பிடித்த ஆயுதத்தை இந்த ஆண்டும் மீண்டும் தூக்கி கொண்டு வந்து, அவையில் இருந்து உரையை வாசிக்காமல் வெளியேறியிருக்கிறார் ஆளுநர் ரவி.
தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், ஒன்றிய அரசின் ஏஜெண்ட்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், ஒன்றிய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக- பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் திமுக சார்பில் 07.01.2025 காலை 10 மணியளவில் “மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்” என கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரையும் – அவரைக் காப்பாற்றும் அதிமுக – பாஜக கள்ளக் கூட்டணியையும் கண்டித்து திமுக சார்பில் 07.01.2025 காலை 10 மணியளவில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்!
– கழக அமைப்புச் செயலாளர் திரு @RSBharathiDMK அவர்கள் அறிக்கை!
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்… pic.twitter.com/MLkNqaN8oi
— DMK (@arivalayam) January 6, 2025