திமுக என்எல்சி விவகாரத்தில் மட்டும் பாஜக நிலைப்பாட்டை ஆதரிக்கிறது – ஜி.கே.மணி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு தமிழக உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், சென்னையில் “வீராவேசம்” செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் கைகட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்?

மத்திய அமைச்சர் கைவிரித்தும் அதுபற்றி கேள்வி எழுப்பாமல் அமைதியாகி விட்டார் அன்புமணி. இங்கே “மண்ணையும், மக்களையும் காப்போம்” என்றவர் டெல்லியில் முகத்திற்கு நேராக, “என்.எல்.சி விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடமாட்டோம்” என்று மத்திய பா.ஜ.க. அமைச்சர், அதுவும் அன்புமணி ராமதாசே விரும்பி இடம்பெற்றுள்ள “டெல்லி தேசிய ஜனநாயகக் கூட்டணியின்” அமைச்சர் அறிவித்த பிறகும், பெட்டிப் பாம்பு போல் அடங்கி கிடப்பது ஏன்? தைரியம் இருந்திருந்தால், அவர் சென்னையில் பேசுவதும் – போராடுவதும் உண்மையென்றால், குறைந்தபட்சம் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பாவது செய்திருக்க வேண்டாமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி  திமுக அரசின் தோல்வியையும் துரோகத்தையும் மூடி மறைப்பதற்காக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மீது பன்னீர்செல்வம் பழி போட முயல்வதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாட்டில் என்.எல்.சி சுரங்கத் திட்டங்களை திரும்ப பெற முடியாது என்று மத்திய அமைச்சர் கூறுவதற்கான துணிச்சலை வழங்கியது தமிழகத்தை ஆளும் திமுக அரசுதான். தமிழ்நாட்டில் 64,750 ஏக்கர் நிலப்பரப்பில் சுரங்கம் அமைப்பதற்கான குத்தகை உரிமம் 1956 ஆம் ஆண்டிலிருந்து என்.எல்.சிக்கு வழங்கப்பட்டுவருகிறது, இந்த உரிமம் வரும் 2036ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

என்எல்சிக்கு வழங்கப்பட்டுள்ள குத்தகை உரிமத்தை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துவிட்டால் அதன் பின் என்.எல்.சி தமிழகத்தில் எதையும் செய்ய முடியாது. அதை செய்யும் அதிகாரம் திமுக அரசுக்கு இருக்கும் நிலையில் அந்த அதிகாரத்தை செயல்படுத்தாமல் பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை பன்னீர்செல்வம் கேள்வி கேட்பதே அவரது கையாலாகாத தனத்தைத்தான் காட்டுகிறது. திமுக அரசின் தோல்வியையும் துரோகத்தையும் மூடி மறைப்பதற்காக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மீது பன்னீர்செல்வம் பழி போட முயல்வதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்