திசை திருப்புதல்களில் திமுகவினர் சிக்காதீர் -மு.க.ஸ்டாலின்.!

Default Image

திசை திருப்புதல்களில் சிக்காமல், நமது கொள்கைப் பாதையில் வலிமையுடன் பயணித்து, மக்களின் பேராதரவுடன் வெற்றிப் பயணமாக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,  நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் முத்தமிழறிஞரின் புகழ்போற்றும் நினைவேந்தல் மடல்.எத்திசை திரும்பினாலும் எனக்குத் தலைவர் கலைஞர் அவர்களின் திருமுகம்தான் தெரிகிறது. இயக்கத்திற்காக எந்தப் பணியை மேற்கொண்டாலும் அவர் நினைவுதான் நெஞ்சத்தை வருடுகிறது. தலைவர் கலைஞர் அவர்களின் மடியினில் தவழ்ந்து, அவர் கரம் பற்றி நடந்து, அவர் நிழலின் கதகதப்பில் வளர்ந்த மகன் என்பதைவிட, அந்த கரகரப்பான காந்தக்குரலின் அன்புக் கட்டளைகளை ஏற்றுச் செயல்பட்ட சிப்பாய் – தலைவர் கலைஞர் அவர்களின் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளில் ஒருவன் – அரை நூற்றாண்டு காலம் அவர் தலைமையேற்றுக் கட்டிக்காத்து வளர்த்த இயக்கத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றிருக்கும் உங்களில் ஒருவன் என்பதே மனதுக்கு இன்பத்தைத் தருகிறது.

காவிரி தீரத்தில் பிறந்து வளர்ந்து, காவேரி மருத்துவமனையில் கண் மூடி நிரந்தர ஓய்வெடுக்கும் நாள் வரை, தமிழ்மொழியின் பெருமை – தமிழ் இனத்தின் உரிமை – தமிழகத்தின் செழுமை – முதன்மை இவற்றிற்காகவே தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா வகுத்தளித்த இலட்சிய வழி நின்று, 80 ஆண்டுகாலப் பொதுவாழ்வில், ஒவ்வொரு நாளும் தன்னையே உருக்கி ஓயாது உழைத்த உத்தமத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

ஜனநாயகத்தைச் சிதைக்கும் மத்திய அரசு, சரணாகதியாகி நிற்கும் மாநில அரசு என உரிமைகள் அனைத்தும் பறிபோகின்ற இந்தக் கடுமையான காலத்தில், உரிமைகளை மீட்கவும் – நலன்களைக் காக்கவும் முன்னெப்போதையும்விட அதிகமாகத் தேவைப்படுகிறார் நம் உயிர் நிகர் தலைவர் கலைஞர் அவர்கள்.தன்னை ஆளாக்கிய அண்ணனின் அருகில், இரவலாகப் பெற்ற இதயத்தை – கொடுத்த வாக்குறுதியின்படி திருப்பியளித்து – நிரந்தர ஓய்வெடுக்கும் அந்த ஓய்வறியாச் சூரியன்தான் இப்போதும் நமக்கு ஒளியாகத் திகழ்கிறது!

தனது உடன்பிறப்புகளுக்கு மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாழ்வளித்த தலைவர் கலைஞர் அவர்கள்தான் இப்போதும் நம்மை வழிநடத்துகிறார். அவருடைய பேராற்றலில் ஒருசில துளிகளை நாம் பெற்றாலும் போதும். வேறு ஆற்றல் ஏதுமின்றி களம் காண முடியும். நோய்த் தொற்றுக் காலத்தில் உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் சொல்வதுபோல, இந்திய ஜனநாயகத்தைச் சிதைக்கும் நோய்த் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் எதிர்ப்பாற்றல்தான் தலைவர் கலைஞர் எனும் மகத்தான ஆற்றல்.

நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் பெருங்கடல் போன்ற பேராற்றலில் உங்களில் ஒருவனான நானும், உடன்பிறப்புகளான நீங்களும் சில துளிகளைப் பெற்று ஒருங்கிணையும்போது அது பெரும் ஆற்றலாக மாறும். இதயத்தை விட்டு அகலாத தலைவர் கலைஞர் அவர்கள் வழங்கிய ஆற்றலைக் கொண்டு, மக்களிடம் செல்வோம். தலைவர் கலைஞர் அவர்கள் படைத்த சாதனைகளையும் அதன் பயன்களையும் அவர்களிடம் சொல்வோம். ஜனநாயகத்தைப் பலிகொடுக்கும் சக்திகளை மக்களிடம் அடையாளம் காட்டுவோம்.

நெருக்கடிகளுக்கு அஞ்சாமல் – திசை திருப்புதல்களில் சிக்காமல், நமது கொள்கைப் பாதையில் வலிமையுடன் பயணித்து, மக்களின் பேராதரவுடன் வெற்றிப் பயணமாக்கிடுவோம். தேர்தல் களத்தில் அந்த வெற்றியை உறுதிப்படுத்தி அதனை, தலைவர் கலைஞர் அவர்களின் ஓய்விடத்தில், அவருடைய திருவடிகளில் காணிக்கையாக்குவோம். அதுவரை ஓயாமல் உழைப்பதே, அந்த ஓய்வறியாச் சூரியனுக்கு நாம் செலுத்தும் உகந்த நினைவேந்தலாகும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Wayanad By polls
congress win karnataka 2024
Priyanka Gandhi - Wayanad
Eknath Shinde - Aaditya Thackeray
rain tn
Sorgavaasal Trailer