நீட் தேர்வுக்கு எதிராக திமுக போராட்டம் : சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!
தமிழகத்தில் நீட் விலக்கு மசோதாவுக்கு அனுமதி அளிக்காத மத்திய அரசை கண்டித்து இன்று தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் உண்ணாவிரத போராட்டம் மாவட்ட தலைநகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று போராட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த போராட்டத்தின்போது நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் இந்த போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர்.
நீட் தேர்வுக்கு எதிரான இந்த உண்ணாவிரத போராட்டம் திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் நடைபெற்று வருகிறது. இன்று காலையிலே தொடங்கப்பட்டுள்ள இந்த போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
மேலும், இந்த உண்ணாவிரத போராட்டமானது மதுரையில் மட்டும் நாளை நடைபெறாது மதுரையில் வரும் 23-ஆம் தேதி திமுக அணியினர் சார்பில் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.