தி.மு.க. தலைவர் மு.கருணாநிதிக்கு வாழ்த்துகூறிய பிரதமர் மோடி ..!
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.கருணாநிதி ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய பிறந்தநாளை தொண்டர்களுடன் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். அவர் உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். தற்போது அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு முக்கிய பிரமுகர்களை தவிர வேறு யாரும் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை.
இந்நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று தன்னுடைய 95வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகிறார். இதற்காக அவரது இல்லம் அமைந்துள்ள கோபாலபுரத்தில் தொண்டர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவிக்க குவிந்து உள்ளனர். இதேபோன்று பிரதமர் நரேந்திர மோடி கருணாநிதிக்கு டுவிட்டர் வழியே தனது வாழ்த்து செய்திகளை தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கலைஞர் கருணாநிதிஜிக்கு அவரது பிறந்த நாளில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், கவிஞன், சிந்தனையாளர் மற்றும் பேச்சாளராக இருப்பவர். இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் கருணாநிதி ஜி ஒருவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
தொடர்ந்து, அவர் ஆரோக்கியமான உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகள் என்றும் பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.