இபிஎஸ் குற்றசாட்டு.. எல்லாம் 6 மாசம் தான்.! திமுக எம்பி திருச்சி சிவா பதில்.!
இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜெயலலிதா பற்றி பேசியது பற்றி குறிப்பிட்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், 1987ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி கருப்பு நாள் என்றும், அன்றைய தினம் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் தாக்கப்பட்டார் என்றும் குறிப்பிட்டார். பின்னர் ஜெயலலிதா சபதம் செய்து, முதலமைச்சராக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார் என்றும் அதனை நான் நேரில் பார்த்தவன் என குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக, இன்று திமுக எம்பி திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதா இருந்தவரையில் எடப்பாடி பழனிசாமியை யாருக்கும் தெரியாது. அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற பிறகு தான், எடப்பாடி பழனிசாமி வெளியே தெரிகிறார்.
அவர் எதோ பக்கத்தில் இருந்து 1987இல் சட்டமன்றத்தில் பார்த்தது போல கூறுகிறார். அன்றைய தின நிகழ்வில் எங்கள் தலைவர் கலைஞரின் கண்ணாடி உடைக்கப்பட்டது. அவரும் தாக்கப்பட்டார். அன்றைய நாள் சட்டமன்ற நிகழ்வில் உடன் இருந்த திருநாவுக்கரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ஆகியோரிடம் இதனை பற்றி கேளுங்கள். பேசுவோர் பேசட்டும் எல்லாம் இன்னும் 6 மாதத்திற்கு தான். பின்னர் நாங்கள் ஆட்சிக்கு வருவோம். ஆட்சிக்கு வந்தால் காட்சிகள் மாறும் என குறிப்பிட்டு பேசினார் திமுக எம்பி திருச்சி சிவா.