திமுக எம்பி திருச்சி சிவா கூறிய ருசிகர உப்மா கதை… சிரிப்பலையில் நாடாளுமன்றம்.!
நாடாளுமன்றத்தில் பாஜக அரசை கலகலப்பான முறையில் ஒரு உப்மா கதையை கூறி திமுக எம்.பி திருச்சி சிவா விமர்சித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்பி திருச்சி சிவா ஒரு உப்புமா கதையை கூறி நாடாளுமன்றத்தை கலகலப்பூட்டினார். மறைமுகமாக பாஜக அரசை விமர்சித்தும் அவர் இந்த உப்புமா கதையை கூறினார்.
திருச்சி சிவாவின் உப்மா கதை : அவர் கூறிய கதையாவது, ஒரு கல்லூரியில் மாணவர் விடுதியில் உப்மா என்பதை தினசரி உணவாக பரிமாறப்பட்டு வந்தது. இதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த உணவு விடுதி வார்டனும் உப்புமாவை மாற்றுவதாக உறுதி அளித்தார். அதற்காக ஓர் சிறிய தேர்தலையும் மாணவர்களிடம் நடத்தினார்.
உப்மா வெற்றி : அந்த வாக்கெடுப்பில் பல்வேறு உணவு வகைகள் இருந்தன. 7 சதவீத மாணவர்கள் பிரட் உணவையும் , 13 சதவீத மாணவர்கள் பூரியையும், 18 சதவீத மாணவர்கள் ஆலு பரோட்டாவையும், 19 சதவீத மாணவர்கள் மசாலா தோசையையும், 23சதவீத மாணவர்கள் உப்மாவையும் தேர்வு செய்தனர் . இறுதியில் மாணவர்களின் போராட்டம் வீணாகி மீண்டும் உப்புமா உணவு பரிமாறப்பட்டது என்று திருச்சி சிவா நாடாளுமன்றத்தில் கூறுகையில் அரங்கம் சிரிப்பலையில் மகிழ்ந்தது.
2024 தேர்தல் : இதேபோன்றுதான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற்றது. ஆனால் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் அவ்வாறாக இருக்காது. எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அனைவரையும் ஒன்றிணைத்து செயல்பட்டு வருகிறார் . என பாஜக மீதான தனது விமர்சனத்தையும் பேசி இருந்தார் திமுக எம்பி திருச்சி சிவா.