பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக என்ன செய்ய போகிறது? டி.ஆர்.பாலு பேட்டி

பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் எழுப்ப வேண்டிய முக்கிய விவகாரங்கள் குறித்து திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.

DMK MP TR Baalu speak about Parliament session 2025

டெல்லி : நாளை (ஜனவரி 31) முதல் பிப்ரவரி 13 வரையில்  நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதில் பிப்ரவரி 1ஆம் தேதி அன்று மத்திய பட்ஜெட் 2025-ஐ நிதியமைச்சார் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.  பட்ஜெட் தாக்கலோடு சேர்த்து 16 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் என்னென்ன விவகாரங்கள் விவாதிக்க வேண்டும் என்பது குறித்து  பல்வேறு கட்சியினரும் ஆலோசனைகளை நடத்தியுள்ளன. அதன்படி, திமுக மக்களவைக் குழு தலைவர்  எம்பி டி.ஆர்.பாலு  திமுக சார்பில் மேற்கொள்ளப்பட்ட விவகாரங்கள் குறித்து பேசினார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  “மத்திய அரசு, பல்கலைக்கழக மாநில குழுவின் (யுஜிசி) புதிய வரைவு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாநில அரசு அதிகாரங்களை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த யுஜிசி கொள்கைகளை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.  இது தொடர்பாக திமுக சார்பில் டெல்லியில் மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்த உள்ளனர். வரும் பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் யார் யார் கலந்து கொள்வார்கள் என்ற விவரம் பின்னர் வெளியிடப்படும் .

வக்பு வாரிய சட்டதிருத்தம் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றம் செய்யப்பட உள்ளது. அதற்காக நாடாளுமன்ற குழு ஆலோசனை நடத்தியது. அந்த குழுத் தலைவர் எதிர்கட்சிகளை பேச அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் சொன்ன தகவலை ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது அந்த குழு அரசாங்கத்திற்கு வக்பு வாரியம் குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. வக்பு வாரிய திருத்த சட்டம் மூலம் மைனாரிட்டி சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  அரசியல் சாசன  சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகிறார் . முழு அரசியல்வாதியாக செயல்படுகிறார். அவரை அங்கிருந்து அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளோம். தமிழ்நாடு அரசுக்கு உரிய வருவாய் நிதி பங்கீடு மாநில அரசுக்கு சேர வேண்டியதை பற்றி கூட்டத்தொடரில் விவாதிக்க உள்ளோம். நிலுவையில் உள்ள பல ஆயிரம் கோடி ஜிஎஸ்டி பாக்கி தொகையை தமிழ்நாட்ற்கு அளிக்க வேண்டும்.

சாதி வாரி கணக்கெடுப்பு இறுதியாக 1939-ம் ஆண்டு நடத்தப்பட்டது. ஒவ்வொரு திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அது சரியாக இடஒதுக்கீட்டின் படி மக்களுக்கு சேர்கிறதா என்பதை கண்டறிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் சரியாக இருக்கும். எனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை வைப்போம்.

தேசிய பேரிடர் நிதி பகிர்வு குறித்து முதலமைச்சர் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் தமிழகத்திற்கு உரிய பேரிடர் நிதியை மத்திய அரசு தரவில்லை அதுகுறித்து கோரிக்கை முன்வைக்க உள்ளோம். தேர்தல் ஆணையம் தேர்தல் வாக்குப்பதிவு சமயத்தில் வீடியோ பதிவு செய்வார்கள். அதனை யார் கேட்டாலும் கொடுப்பார்கள். ஆனால் இனி கொடுக்க மாட்டடோம் என தேர்தல் ஆணையம் கூறியது கண்டிக்கத்தக்கது. அது தொடர்பாக குரல் கொடுப்போம்.

எந்த திட்டம் வந்தாலும், ஹிந்தி தலைப்பு அல்லது சமஸ்கிருதத்தில் தான் உள்ளது. இதுகுறித்தும் விவாதம் எழுப்புவோம். இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது  தாக்குதல் நடத்துகிறார்கள். இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் தான் பேசி வருகிறார். இப்பிரச்சனையில் பிரதமர் நேரடியாக பேச வேண்டும். இதுபோல நிறைய விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப உள்ளோம்.” என திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்